Main Menu

செம்மணி, முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணை அவசியம்.. கஜேந்திர குமார் எம் பி

தமிழினப் படு*கொ*லையின் சாட்சியாக காணப்படுகின்ற செம்மணி மற்றும் முள்ளிவாய்க்கால் விவகாரங்கள் சர்வதேச விசாரணை ஒன்றின் மூலமே நீதியை நிலைநாட்ட பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

நேற்று (18) யாழ் காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள அவரது கட்சித் தலைமை அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் தமிழ் மக்கள் கொத்துக்கொத்தாக ஒரே தடவையில் இனப்படுகொலை செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் படுகொலையை இந்த அரசாங்கம் இனப் படுகொலையாக ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.

தற்போது செம்மணி மனிதப் புதை குழியில் 380க்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு உள்ள நிலையில் தமிழின படுகொலையின் சாட்சியாக செம்மணி விளங்குகிறது.

குறித்த மயானத்தில் மனித எச்சங்கள் வெளிவந்த போது சிலர் அதனை ஏளனமாக பேசிய வரலாறுகள் இருக்கின்ற நிலையில் நாம் அதனை தொடர்ந்து சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தியதன் விளைவாக இன்று உலக அளவில் பேசப்பட்டும் மனிதப் புதைகுழியாக காணப்படுகிறது.

இந்த அரசாங்கமும் வேறு வழி இன்றி அதனை அகழ்ந்து வரும் நிலையில் தொடர்ச்சியாக அகழ்வுப் பணிகளை நிறுத்தாமல் உண்மை உள்ளபடி வெளிப்படுத்துவார்களா என்ற சந்தேகம் இருக்கிறது.

இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களுக்களுக்கு நீதி கிடைக்காது என்பதில் நாம் நம்பிக்கை வைத்துள்ள நிலையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ஊடாகவே நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கை.

ஆகவே தமிழ் மக்கள் இறுதி யுத்தத்தில் கொத்தாக கொல்லப்பட்ட முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை மற்றும் செம்மணி படுகொலைகளுக்கும் சர்வதேச நீதியே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.