Main Menu

நெருக்கடியான சூழ்நிலையிலேயே விரும்பியவர்களுக்கே வாக்களிக்குமாறு கூறினோம் – சிவசக்தி

தபால் மூல வாக்களிப்பில் மக்கள் விரும்பியவர்களுக்கே வாக்களிக்கலாமென 5 கட்சிகள் கூட்டாக எடுத்த முடிவு மிகவும் நெருக்கடியான சூழ்நிலையிலேயே எடுக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

ஜரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகளுக்கும் நாடாளுமன்ற உறுப்பினருக்கும் இடையில் வவுனியாவில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இன்று (வியாழக்கிழமை) கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

“ஜந்து கட்சிகளின் இணக்கப்பாட்டில் உருவாக்கப்பட்ட கோரிக்கைகளை பிரதான வேட்பாளர்கள் நிராகரித்த நிலையில், அதற்கு ஒரு இனவாத சாயம் பூசப்பட்டிருக்கிறது.

தெற்கின் பிரதான வேட்பாளர்கள் இறுதிகட்ட போரை யார் வெற்றிகொண்டது என்ற போக்கிலேயே சிங்கள மக்கள் மத்தியில் பரப்புரைகளை மேற்கொண்டு வாக்குகளை எடுப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள்.

எனவே இந்த விடயமானது தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் தமிழ் மக்களுக்கும் சவாலான விடயமாக இருக்கிறது.

ஜந்து கட்சிகளினால் தயாரிக்கப்பட்ட கோரிக்கைகளை இரு வாரங்களுக்கு முன்னரே பிராதன வேட்பாளர்களிடம் முன்வைத்து அவர்களுடன் கலந்துரையாடுவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டது.

ஆனால் அந்த வேட்பாளர்கள் எம்மை சந்திக்கவும் தயாரில்லை. எமது கோரிக்கைகளையும் பரிசீலிக்கவும் தயாரில்லாத ஒரு நிலைமையே இருக்கிறது.

எனவே இவர்களுக்காக நாங்கள் காத்திருக்க முடியாது. அதனடிப்படையிலேயே இன்று தபால் மூலம் வாக்களிக்கும் மக்களுக்கு ஒரு செய்தியை கூற வேண்டியிருந்தது. அந்த முடிவு ஒரு நெருக்கடியான சூழ்நிலையிலேயே ஜந்து கட்சிகளினாலும் எடுக்கப்பட்டது” என மேலும் தெரிவித்தார்.

பகிரவும்...