Main Menu

நாளை முதல் உள்நாட்டு விமானப் போக்குவரத்து

இரண்டு மாதங்களுக்குப் பிறகு நாளை முதல் உள்நாட்டு விமானப் போக்குவரத்து தொடங்க உள்ளதால் பயணிகளை எதிர்கொள்ள விமான நிலையங்கள் தயாராகி வருகின்றன.

கொரோனா பரவலைத் தடுக்கும் நோக்குடன் அறிவிக்கப்பட்ட நாடு தழுவிய ஊரடங்கால் விமானம், ரயில், பேருந்து உள்ளிட்ட அனைத்துப் போக்குவரத்துகளும் முடங்கிவிட்டன. கிட்டதட்ட இரண்டு மாதமாகிவிட்ட நிலையில் நாளை முதல் உள்நாட்டு விமான சேவைக்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. டெல்லி விமான நிலையம் பயணிகளின் பாதுகாப்புக்கான பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

பல இடங்களில் தானியங்கி கை சுத்தம் செய்யும் சானிட்டைசர்கள் பொருத்தப்பட்டுள்ளன. தரை விரிப்புகள், வாயில்கள் திறப்பு, பயணிகள் செக் இன் மையங்கள், போன்றவற்றுடன் மனிதர் ஒருவரை ஒருவர் நெருங்குவதற்கான வாய்ப்புகள் அறவே தவிர்க்கப்பட்டு சமூக இடைவெளிக்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. விமான நிலையங்களின் கடைகள் திறக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு சோதனைகள் முடிந்த பின்னர் பயணிகள் கடைகளுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

பயணிகள் அனைவருமே ஆரோக்கிய சேது செயலியை தங்கள் செல்போன்களில் டவுன்லோடு செய்யவும், வழக்கத்தை விட இரண்டு மணி நேரம் முன்னதாக விமான நிலையம் வந்துவிடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதனிடையே விமானப் பயணிகளை விமான நிலையத்தில் சோதித்து 7 நாட்களுக்கு தனிமைப்படுத்த உள்ளதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது. கேரள அரசு விமான நிலையத்தில் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனைகளை நடத்தி வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளது. இதே போன்று ஆந்திரா, தெலுங்கானா, அஸ்ஸாம் போன்ற மாநிலங்களும் பயணிகளை தனிமைப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளன. தமிழ்நாடு அரசு மே 31 ஊரடங்கு முடியும் வரை விமானங்களை இயக்க வேண்டாம் என மத்திய அரசைக் கேட்டுக் கொண்டுள்ளது. 

பகிரவும்...