Main Menu

நவீன இரும்பு மனிதராக மோடி திகழ்கிறார்- தமிழிசை சவுந்தரராஜன் புகழாரம்

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால் நவீன இரும்பு மனிதராக மோடி திகழ்கிறார் என்று தமிழிசை சவுந்தரராஜன் புகழாரம் சூட்டினார்.

கா‌‌ஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து, சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததை, சென்னையில் உள்ள பா.ஜனதா தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடினர். இதற்கு தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமை தாங்கினார்.

முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்தியா சுதந்திரம் அடைந்த பின் நேற்று(நேற்று முன்தினம்) ஒரு மகிழ்ச்சியான நாள். கா‌‌ஷ்மீரும் தேசிய நீரோட்டத்தில் இணைந்து, கா‌‌ஷ்மீரும் நமதே என்ற ஒரு பிரமாண்டமான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கா‌‌ஷ்மீரில் இருக்கும் 1 சதவீத மக்கள் தொகைக்காக இந்திய பட்ஜெட்டில் 10 சதவீதம் சிறப்பு அந்தஸ்துக்காக செலவிடப்பட்டும் அங்கு, வேலைவாய்ப்பு, தொழிற்சாலைகள், வளர்ச்சி திட்டங்கள், கல்வி சாலைகள், பெரிய மருத்துவமனைகள் என ஒன்றும் கிடையாது.

சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதன் மூலம் மற்ற மாநில மக்கள் என்ன இடஒதுக்கீட்டை அனுபவிக்கிறார்களோ? அதே இடஒதுக்கீட்டை கா‌‌ஷ்மீர் மக்களும் அனுபவிக்க முடியும். ஆனால், தமிழகத்தில் சமூகநீதி பேசும் தி.மு.க.வினர் மற்றும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் இதனை எதிர்க்கின்றனர். சட்டத்திட்டங்களை மதிக்காமல் கள்ளத்தோணி ஏறி இலங்கைக்கு சென்ற வைகோவிடம் நாம் வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது.

நேரு மட்டும் குறுக்கிடாமல் இருந்திருந்தால், எப்படி ஐதராபாத்தை இணைத்தேனோ அதேபோன்று கா‌‌ஷ்மீரையும் இணைத்து இருப்பேன் என்று சர்தார் வல்லபாய் பட்டேல் தெளிவாக கூறியிருந்தார். எனவே, நவீன இரும்பு மனிதராக பிரதமர் மோடி திகழ்கிறார். இணை இரும்பு மனிதராக அமித்‌ஷா விளங்குகிறார்.

தி.மு.க.வினர் கையில் நிறைய பணம் வைத்து இருப்பதால் கா‌‌ஷ்மீரில் இனி நிலம் வாங்குவார்களே என்ற பயம் தான் இருக்கிறதே தவிர; கார்ப்பரேட்டுகள் நிலம் வாங்குவார்கள் என்ற பயம் இல்லை. இதற்கு முன் சிறப்பு அந்தஸ்து வழங்கும்போது எந்த வாக்கெடுப்பும் நடக்கவில்லை. எனவே தற்போது எடுக்கப்பட்டுள்ள முடிவை சட்டரீதியாக எங்கும் எதிர்கொள்ள முடியாது.

இவ்வாறு அவர் கூறினார். 

பகிரவும்...