Main Menu

தொடர் முடக்கத்தினால் பட்டிணி கிடக்கும் நிலைமைக்கு தள்ளப் பட்டுள்ளோம்- மக்கள் வீதியில் இறங்கி போராட்டம்

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒரு மாதகாலமாகத் தொடரும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தினால், தமது வாழ்வாரம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி மோதரை மற்றும் இக்பாவத்தை பகுதி மக்கள் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

இன்று (சனிக்கிழமை) காலை ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், குறித்த போராட்டத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு பொலிஸார் முயன்றபோதும், அதிகளவான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டமையினால் அங்கிருந்து அவர்கள் வெளியேறியுள்ளனர்.

இந்நிலையில் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவித்துள்ளதாவது, “கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் எங்களது பகுதிகளில் அதிகரித்தமையினால் கடந்த ஒரு மாதகாலமாக தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கின்றது.

இதனால் தொழிலுக்கு செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதுடன், அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 5000 ரூபாய் எங்களது குடும்பத்தின் தேவைக்கு போதுமானதாக இல்லை.

மேலும் உணவின்றி பட்டிணி கிடக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளோம். எனவே அரசாங்கம் எங்களது நிலைமையை உணர்ந்து உடனடியாக  நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிறு குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்” என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் கவலை வெளியிட்டுள்ளனர்.

பகிரவும்...