Main Menu

தேர்தல் முறைமை நிச்சயமாக மாற்றப்பட வேண்டும்- மாவை

மாகாணசபை தேர்தலை நடாத்துவதற்கு முன்பாக தேர்தல்முறைமை என்பது கட்டாயமாக மாற்றப்படவேண்டும் என இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

மட்டக்களப்பில் இன்று (வியாழக்கிழமை) ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் “நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தின் தீர்மானத்தின் அடிப்படையில் மாகாணசபை தேர்தலை நடாத்துவதற்கு தேர்தல் சட்டத்தில் திருத்தங்களை செய்யவேண்டிய தேவையுள்ளது.

என்ன திருத்தம் என்பது தொடர்பான பிரேரணையினை நாடாளுமன்றத்தில் அரசாங்கம் முன்வைக்கின்றபோது அது தொடர்பில் நாடாளுமன்றத்தில் எமது கட்சியின் உறுப்பினர்கள் கருத்து தெரிவிப்பார்கள்.அவ்வாறான பிரேரணையொன்று கொண்டுவரப்படும்போது அது தமிழ் மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் இருக்கவேண்டும்.

அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் தீர்மானம் முன்வைக்கப்பட்டால் அது தொடர்பில் கட்சி ஆராய்ந்து அதற்கு ஏற்றாற்போல் தீர்மானம் எடுக்கும். தேர்தல்முறைமை என்பது கட்டாயமாக மாற்றப்படவேண்டும். முதலாவதாக மாகாணசபைத்தேர்தலை நடாத்தவேண்டும் என்ற உறுதிப்பாடு இந்த அரசாங்கத்திற்கு இருக்கவேண்டும். ஐநா மனித உரிமை பேரவையில்கூட அது சொல்லப்பட்டுள்ளது.

தேர்தல் முறையில் பல பிழைகள் காணப்படுகின்றது. எல்லை நிர்ணயம் செய்யவேண்டிய நிர்ப்பந்தம் இருக்கின்றது. எதை அரசாங்கம் முன்வைக்கப்போகின்றது என்பதை அறிந்த பின்னர் அது தொடர்பில் ஆராய்ந்து எங்களது நிலைப்பாட்டினை வெளிப்படுத்துவோம். “ என தெரிவித்துள்ளார்.

பகிரவும்...