Main Menu

திரைமறைவு அரசியல் நாடகங்களால் மக்கள் இக்கட்டான நிலைக்குள் தள்ளப்படும் ஆபத்து- சிவமோகன்

திரைமறைவு அரசியல் நாடகங்களால் மக்கள் இக்கட்டான சூழ்நிலைக்குள் தள்ளப்படும் ஆபத்து உள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய காலநிதி சிவமோகன் தெரிவித்துள்ளார்.

அவர் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையில் அவர் கூறுகையில், “கொரோனா சூழலால் பொதுமக்கள் அதிகப்படியான மன அழுத்தத்திற்கும் பொருளாதார நெருக்கடிக்குள்ளும் தள்ளப்பட்டுள்ளார்கள்.

தங்களது தொழில்களை இழந்து பெரிய தொழிலாளர்கள் முதல் நாளாந்த வருமானம் பெறுபவர்கள் வரை தங்களது எதிர்காலம் என்னவாகுமோ என்ற ஏக்கத்தில் இருந்துகொண்டு தங்களது குடும்பத்தினரை எப்படிக் காப்பாற்ற முடியும் எனத் தவித்து வருகிறார்கள்.

சில குடும்பங்கள் ஒருவேளை உணவு உண்ணுவதற்குக் கூட வழியின்றி இருக்கிறார்கள். அவர்களுக்கு உதவ மனமுள்ள தனவந்தர்கள் கூட வங்கிச் செயற்பாடுகள் முடக்கப்பட்டு இருப்பதால் ஏதும் செய்யமுடியாதுள்ளார்கள்.

இப்படியான நிலையில் தேர்தலை நடத்துவது குறித்து பேசப்பட்டுவருகிறது. அப்படியாக இருந்தால் நாடு முழுவதும் கொரோனா ஒழிக்கப்பட்டது என அரசாங்கம் அல்லது சுகாதாரத் துறையினரால் பகிரங்கமாக அறிவித்தல் விடுக்கப்பட்ட பின்னரே தேர்தலை அறிவிப்பு வரவேண்டும்.

அதனைவிட, குறைந்தது மூன்று மாதங்களாவது மக்கள் தங்களை மீள்கட்டுமானம் செய்துகொள்ள மக்களுக்கு வழி விடவேண்டும். அதன் பின்னர்தான் தேர்தல் ஆணையகம் தேர்தல் என்ற வார்த்தையை உச்சரிக்க வேண்டும்.

அதைவிடுத்து, ஒரு சில அரசாங்க அமைச்சர்களும் அரசாங்க கட்சியைச் சேர்ந்தவர்களும் வெறுமனே இரண்டு வாரங்கள் அறிவித்தலில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனக் கூக்குரல் இடுவது மக்களிடையே உளவியல் தாக்கத்தையே ஏற்படுத்தி வருகிறது என்பதுதான் யதார்த்தம்.

இந்த அரசாங்கம் வேட்பு மனுத்தாக்கல் செய்யும் காலத்துக்கு முன்னரே இந்த கொரோனா தாக்கம் உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்ததை நன்கு அறியும். ஆனால் ஏனைய அதிகாரிகள் இதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியபொழுது எப்படியாவது வேட்பு மனுத்தாக்கலை முடித்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயற்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

ரணில் ஒரு பக்கமும் சஜித் ஒரு பக்கமும் கயிற்றை இழுத்துக் கொண்டிருக்க ஒட்டு மொத்தமாக சேர்த்து தற்போதைய அரசாங்கம் இந்தத் தேர்தலை மக்களிடம் பலாத்காரமாக திணித்தது என்பதுதான் உண்மை.

வேட்பு மனுத்தாக்கலுக்கு முன்னதாகவே இந்த விடயங்கள் வெளிப்படையாகத் தெரிந்தபொழுது ஒட்டுமொத்தமாக இலங்கையில் விமான நிலையங்களில் கட்டுப்பாட்டு நடைமுறைகளை விதித்திருந்தால் இவ்வளவு தூரத்திற்கு இந்த நாடு மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்காது.

இன்று இந்த ஊரடங்கு உத்தரவுகளால் மக்கள் படும் துன்பங்கள் சொல்லில் அடங்காதவை. எனவே இந்த அரசு ஏற்கனவே விட்ட தவறுபோல் மீண்டும் ஒரு முறை தவறிழைத்து மக்களை இக்கட்டில் தள்ளக் கூடாது.

எனவே தேர்தல் என்ற முயற்சியை உடனடியாகக் கைவிட்டு மக்களை இந்தக் கொடூரமான நோயிலிருந்து காப்பாற்றுவதற்கு அரசாங்கம் தொடர்ந்து உழைக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...