Main Menu

திருடிச் சென்ற புராதன பொருளை 50 ஆண்டுக்கு பின் மீள ஒப்படைத்த அவரது நண்பர்

ஜேர்மனியிலிருந்து பிரித்தானியாவுக்கு சுற்றுலா சென்ற நண்பர்களில் ஒருவர் திருடிச் சென்ற புராதன சிறப்பு மிக்க பொருள் ஒன்றை, 50 ஆண்டுகளுக்குப்பின் அவரது நண்பர் ஒருவர் திருப்பிக் கொடுத்துள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது.

ஜேர்மனியைச் சேர்ந்த Klaus Weber (72)ம் அவரது ஆறு நண்பர்களும், 1969ஆம் ஆண்டு முதல் முறையாக ஜேர்மனியிலிருந்து வெளிநாட்டுப்பயணம் ஒன்றை மேற்கொண்டனர்.

அவர்கள் பிரித்தானியாவிலிருந்த கதீட்ரல் தேவாலயம் ஒன்றிற்கு சென்றபோது, அங்கு பைப் ஆர்கன் என்னும் இசைக்கருவி ஒன்று பிரித்து வைக்கப்பட்டிருப்பதைக் கண்டுள்ளனர்.

அப்போது, அதிலிருந்து குழாய் ஒன்றை திருடி வைத்துக் கொண்டார் Weberஇன் நண்பர் ஒருவர்.

நண்பர்கள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவர் கேட்கவில்லை.

இரண்டு வாரங்களுக்குப்பின் ஜேர்மனிக்கு திரும்பும் நேரத்தில், சுங்கச் சோதனையின்போது சிக்கிக்கொள்வோம் என்ற பயம் அந்த நண்பருக்கு ஏற்பட, அதை விட்டு விட்டு செல்ல அவர் முடிவு செய்ய, அது ஒரு புராதன சிறப்பு மிக்க பொருள் என்பதால் அதை தான் கொண்டு வந்து தருவதாக கூறி Weber அதை வைத்துக் கொண்டார்.

ஆனால் அதற்குப்பிறகு அவரால் தனது நண்பரை சந்திக்க முடியவில்லை.

இது நடந்து சுமார் 50 ஆண்டுகளுக்குப்பிறகு அந்த கருவியை பிரித்தானியாவிலுள்ள அந்த கதீட்ரலின் பொறுப்பாளரிடம் ஒப்படைக்க முடிவு செய்தார் Weber.

தற்போது அவர் அந்த கருவியுடன் சேர்த்து 50 பவுண்டுகளையும் பிரித்தானியாவுக்கு அனுப்பியுள்ளார்.

ஆண்டொன்றிற்கு அந்த கருவிக்கான வாடகையாக 1 பவுண்டு வீதம் 50 பவுண்டுகள் என கணக்கிட்டு அதை அவர் அனுப்பியுள்ளார்.

ஜேர்மனியிலிருந்து பிரித்தானியாவுக்கு சென்ற நாளின் 50ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடுவதற்காக மீண்டும் நண்பர்கள் கூடியபோதுதான் தனக்கு இந்த திட்டம் தோன்றியதாக தெரிவித்துள்ளார் Weber.

இந்நிலையில், அந்த இசைக்கருவி 2 மில்லியன் பவுண்டுகள் செலவில் புதுப்பிக்கப்படுகிறது.

தான் அனுப்பும் 50 பவுண்டுகளும், இசைக்கருவியை புதுப்பிக்கும் தொகையுடன் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என தான் விரும்புவதாக தெரிவித்துள்ளார் Weber.

இதற்கிடையில், கதீட்ரல் ஊழியர்கள், உண்மையில் அந்த குழாய் காணாமல் போனதை தாங்கள் கவனிக்கவேயில்லை என்கின்றனர். காரணம், அந்த இசைக்கருவியில் 5,300 குழாய்கள் உள்ளன!

பகிரவும்...