Main Menu

தாய்வான் கடற்படை வீரர்கள் 700 பேர் தனிமைப் படுத்தப்பட்டனர்

தாய்வான் கடற்படை வீரர்கள் 700 பேரை தனிமைப்படுத்தியுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

கடற்படையில் பணியாற்றிய சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டமையினைத் தொடர்ந்து குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பசுபிக் பிராந்தியத்தின் பாலவ் தீவு மக்களுக்கான நல்லெண்ண வேலைத் திட்டத்தில் ஈடுபட்ட கடற்படை வீரர்களில் மூவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டமையினைத் தொடர்ந்தே, இவ்வேலைத் திட்டத்தில் ஈடுபடுத்தப்பட்ட கடற்படை வீரர்களில் 700 பேரை தனிமைப்படுத்த தாய்வான் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

தாய்வானில் இருந்து கடற்படை ஊழியர்களை ஏற்றிக்கொண்டு மூன்று கடற்படைக் கப்பல்கள் குறித்த தீவுக்குப் பயணம் செய்து தாய்வான் மற்றும் பாலவ் ஆகிய நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவினை மேம்படுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டன.

கடந்த மார்ச் மாத நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த வேலைத் திட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டவர்களுக்கே இவ்வாறு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், மூன்று கப்பல்களிலும் பயணித்த வீரர்கள் மீண்டும் அழைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தாய்வான் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தாய்வானின் ஜனாதிபதி ஷாய்-இங்-வென் குறித்த கடற்படைக் கப்பல்களை வரவேற்கும் நிகழ்வில் கலந்துகொண்டிருந்ததாகவும், எனினும் கடற்கரையில் இருந்தவாறே குறித்த வீரர்களை நோக்கிக் கரம் அசைத்து வாழ்த்துத் தெரிவித்துவிட்டு திரும்பியதாகவும் தாய்வான் ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

தாய்வான் படையினர்களுக்குள் பதிவாகியிருக்கும் முதல் கொரோனா வைரஸ் தோற்று இவை என்பதுடன், தொற்றுக்குள்ளான வீரர்கள் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் குறித்த கப்பல்கள் முழுமையாகத் தொற்று நீக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பகிரவும்...