Main Menu

தாய்வானின் பல்வேறு நிறுவனங்களுக்கு எதிராக சீனா பொருளாதாரத் தடை!

சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி, அமெரிக்க நாடாளுமன்ற கீழவைத் தலைவர் நான்சி பெலோசியை வரவேற்றுள்ள தாய்வானின் பல்வேறு நிறுவனங்களுக்கு எதிராக பொருளாதாரத் தடை மற்றும் இறக்குமதிக்கான தடையை சீனா விதித்துள்ளது.

பட்டாசுகள், நூடுல்ஸ், வேகவைத்த பொருள்கள் மற்றும் இனிப்புகளை உற்பத்தி செய்யும் 35 நிறுவனங்களின் 107 பதிவு செய்யப்பட்ட தாய்வானிய உணவு நிறுவனங்களின் தயாரிப்புப் பொருள்களுக்கு பொருளாதார தடைகள் மற்றும் இறக்குமதிக்கு நேற்று (புதன்கிழமை) சீனா தற்காலிகமாக தடை விதித்துள்ளது.

மேலும், இயற்கை மணல் ஏற்றுமதியை நிறுத்துவதாக சீனா அறிவித்துள்ளது. இதனை தாய்வானின் விவசாய கூட்டமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.

தடை செய்யப்பட்டுள்ள நிறுவனங்களில் தேயிலை, உலர் பழங்கள், தேன், கொக்கோ பீன்ஸ் மற்றும் காய்கறிகள் உற்பத்தியாளர்களும், சுமார் 700 மீன்பிடி கப்பல்களில் இருந்து மீன் பிடிபடுபவர்களும் அடங்குவர் என விவசாய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், பல தாய்வானிய நிறுவனங்கள் தங்களின் பதிவை புதுப்பித்த நிலையில் சீனாவின் தடை அறிவிப்பால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சீனாவின் இந்த நடவடிக்கை தாய்வானுக்கு பொருளாதார ரீதியில் பெரும் பின்னடைவாக இருக்கும் என கருதப்படுகிறது.

இதனிடையே நான்சி பெலோசியின் வருகைக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக சீனாவுக்கான அமெரிக்கா தூதரை சீனா நேரில் அழைத்து சம்மன் வழங்கியது.

மேலும் அமெரிக்கா தனது தவறுகளுக்கு விலையை கொடுக்கும் எனவும் சீனா எச்சரித்தது.

பகிரவும்...