Main Menu

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நிறை புத்தரிசி பூஜைக்காக நேற்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார். நடிகர் ஜெயராம், தேவஸ்தான தலைவர் அனந்தகோபன், சபரிமலை சிறப்பு ஆணையர் மனோஜ், தலைமை பொறியாளர் அஜித்குமார் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு விபூதி பிரசாதம் வழங்கினார். இதனை தொடர்ந்து இரவு 10 மணிக்கு நடை சாத்தப்பட்டது. நிறை புத்தரிசி பூஜைக்காக நெற்கதிர் கட்டுகள் நேற்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து எடுத்து வந்து 18-ம் படி வழியாக கொண்டு செல்லப்பட்டு மேல்சாந்தியிடம் பக்தர்கள் ஒப்படைத்தனர். இன்று வழக்கமான பூஜைகளுடன் இரவு 10 மணிக்கு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும். மீண்டும் ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 16-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும். 17-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை 5 நாட்கள் சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெறுகிறது. இதற்கிடையே சபரிமலை ஐயப்பன் கோவிலில் சேதம் அடைந்துள்ள தங்க கூரை பராமரிப்பு பணி தொடங்க உள்ளது. இந்த பணிகள் நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனுக்கு முன்னதாக முடிக்கப்படும் என தேவஸ்தான தலைவர் அனந்தகோபன் தெரிவித்தார். கேரளாவில் பலத்த மழை காரணமாக சபரிமலை பம்பை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

பகிரவும்...