Main Menu

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் ஆசனம்: ரெலோவும் கடும் எதிர்ப்பு!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமிழீழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) கருத்தையும் கேட்டு தேசியப் பட்டியல் குறித்த முடிவை எடுத்திருக்க வேண்டும் என அதன் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தன்னிச்சையாக தேசியப் பட்டியல் ஆசனம் வழங்கப்பட்டமையை வன்மையாகக் கண்டிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மன்னாரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் கூறுகையில், “தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் ஆசன ஒதுக்கீடானது பங்காளிக் கட்சிகயான புளொட் மற்றும் டெலோ ஆகிய இரு கட்சிகளுடன் எவ்வித ஆலோசனைகளும் நடத்தாமல் தேசியப் பட்டியல் ஆசனத்தை அம்பாறை மாவட்டத்திற்கு வழங்கி வைத்துள்ளனர்.

அம்பாறை மாவட்டத்திற்கு குறித்த தேசியப் பட்டியல் ஆசனம் வழங்கப்பட்டமைக்கு டெலோ எவ்வித எதிர்ப்பும் இல்லை. ஏனைய மாவட்டங்களில் பிரதிநிதித்துவம் இருக்கின்றமையினால் அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் ஏனையவர்களினால் மிகவும் மோசமான செயற்பாடுகளினால் பாதிக்கப்படுகின்றனர்.

அடக்குமுறைக்குள் வாழ்ந்து கொண்டிருக்கின்ற எமது மக்களுக்கு ஒரு பிரதிநிதித்துவம் தேவை. அந்த பிரதிநிதித்துவத்தை அம்பாறை மாவட்டத்திற்கு வழங்குவதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை.

ஆனால், ஜனநாயக ரீதியில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிலும் கலந்தாலோசிக்க வேண்டிய நிலையுள்ளது.

இரா.சம்பந்தன் அவர்கள் தன்னிச்சையாக குறித்த தெரிவை மேற்கொண்டு இருக்கின்றார் என்பது வேதனையை ஏற்படுத்தியுள்ளது. சிறிய விடயத்திலே இவ்வாறு நடந்துகொண்டால் எதிர்கால நடைபெறப்போகும் நிலைமை குறித்தே எதிர்ப்பை தெரிவிக்கின்றோம்.

எங்களோடும் கலந்து ஆலோசித்து எடுக்கப்படுகின்ற முடிவுகளுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருக்கின்ற அனைவரும் ஆதரவை வழங்குவோம்.

ஏற்கனவே, எமக்கு ஆசனங்கள் குறைவடைந்துள்ளன. எங்களுக்கிடையில் ஒற்றுமை இல்லை என்கின்ற நிலைப்பாடு உள்ளது. அந்த வகையிலே இவ்வாறான சம்பவங்கள் காலப்போக்கில் பாரிய பின்னடைவுகளை ஏற்படுத்தும்.

மாவை சோனதிராஜா அவர்களிடம் கூட ஆலோசனைகள் செய்தார்களா என்று தெரியவில்லை. குறித்த தேசியப் பட்டியல் ஆசனமானது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுடன் கலந்தாலோசித்து வழங்கப்பட்டிருக்க வேண்டும். தன்னிச்சையான முடிவை நாங்கள் எதிர்க்கின்றோம். இவ்வாறான தன்னிச்சையான முடிவு இனி எந்த காலத்திலும் மேற்கொள்ளப்படக் கூடாது.

சம்பந்தன் ஒரு வயது முதிர்ந்தவர். அனுபவம் உள்ளவர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக உள்ளவர். இவ்வாறான சம்பவங்கள் எமது மக்களை சஞ்சலத்திற்கு உள்ளாக்கும். எனவே குறித்த தன்னிச்சையான செயற்பாட்டிற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...