Main Menu

தமிழ்நாடு முழுவதும் 5 ஆயிரம் மையங்கள்- ஏப்ரல் 1ம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி

பொது மக்களுடன் தொடர்புடைய நபர்கள், மார்க்கெட்டில் பணிபுரிபவர்கள், பஸ், ரெயில் நிலையங்களில் வேலை பார்ப்பவர்கள், திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்கள் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

கொரோனா தடுப்பூசி (கோப்புப்படம்)சென்னை:

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர். ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் கொரோனா பரவுவது படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வந்தாலும் பொது மக்களின் ஒத்துழைப்பு இன்னும் தேவைப்படுகிறது.

ஏற்கனவே மகாராஷ்டிரா மாநிலத்தில் பன்மடங்கு கொரோனா தொற்று உயர்ந்துள்ளது. கர்நாடகா, டெல்லி, சத்தீஸ்கர், குஜராத், மத்தியப்பிரதேசம், பஞ்சாப், அரியானா, தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் கொரோனா பரவல் ஏறுமுகமாகவே உள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை மகாராஷ்டிரா மாதிரி பன்மடங்கு உயராமல் படிப்படியாகத்தான் உயருகிறது. கொரோனா பன் மடங்கு உயராமல் தடுக்க பொதுமக்கள் இந்த காலகட்டத்தில்தான் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

முககவசம் அணியாமல் பாதுகாப்பற்ற முறையில் நடந்து கொள்ளும் போது தான் பலருக்கு இது பரவி விடுகிறது. எனவே இது பரவாமல் தடுக்க தடுப்பூசி போடுவது மிகவும் அவசியம். அதேபோல் முககவசம் அணிவதும் நோய் பரவுவதை தடுக்கும் வழிமுறையாகும். கூட்டம் அதிகமாக உள்ள இடங்களுக்கு செல்லும் போதும் கொரோனா பரவ வாய்ப்பு அதிகம் என்பதால், ஒவ்வொருவரும் அரசு வழிமுறைகளை கடைபிடிப்பது அவசியம்.

அண்மையில் தஞ்சாவூர், காஞ்சிபுரம் பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் இப்படித்தான் கொரோனா பரவி விட்டது. எனவே முக கவசம் அணியாமல் சென்றாலோ, சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருந்தாலோ அல்லது கைகழுவாமல் இருந்தாலும் அடுத்த சில மாதங்களில் நமக்கு கொரோனா நோய் வர வாய்ப்புள்ளது.

எனவே கொரோனா பரிசோதனை நடைபெறும் இடங்களில் பரிசோதனை செய்து கொள்வதும் அவசியமாகும். கொரோனா தொற்று உயர்ந்து வருவதை குறைக்க பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒத்துழைத்தால்தான் இதனை நாம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும்.

இதுவரை மற்ற நோய்கள் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வந்தது. வருகிற 1-ந் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட எந்த நோயும் இல்லாதவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட இருக்கிறது. இதற்கு முன்பதிவு செய்ய அவசியம் இல்லை. ஆதார் கார்டு அல்லது வேறு ஏதாவது அடையாள அட்டை வைத்திருந்தால் போதும். அருகில் உள்ள மையங்களுக்கு சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.

தமிழ்நாட்டில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்கள் தடுப்பூசி போடுவதற்காக திறக்கப்பட்டுள்ளன. ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரிகள், மருத்துவக் கல்லூரி மருத்துவனைகள், தனியார் ஆஸ்பத்திரிகள், மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் இதற்கென ஊழியர்கள் உள்ளனர்.

எனவே பொது மக்களுடன் தொடர்புடைய நபர்கள், மார்க்கெட்டில் பணிபுரிபவர்கள், பஸ், ரெயில் நிலையங்களில் வேலை பார்ப்பவர்கள், திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்கள் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

கடந்த மார்ச் 16-ந் தேதி முதல் இதுவரை முககவசம் அணியாமல் சென்றதாக 61,246 பேரிடம் இருந்து அபராதமாக ரூ.1.31 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பகிரவும்...