Main Menu

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புதிய அரசிற்கு ஆதரவு அளிக்கத் தயார் – சுமந்திரன்

இந்தியாவுக்கு வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையில் அதிகாரப் பகிர்வை அர்த்தமுள்ளதாக்கும் நடவடிக்கை, அரசியல் கைதிகளின் விடுதலை, அபிவிருத்திப் பணிகள் போன்ற நடவடிக்கைகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்கத் தயார் என எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், புதிய அரசாங்கம் சரியான நடவடிக்கைகளை எடுக்கும் போது நாம் அவற்றுக்கு எதிப்புத் தெரிவிக்கமாட்டோம் என்றும் கூறினார்.

ஏற்கனவே இடைநடுவில் நிற்கும் புதிய அரசியலமைப்புத் தயாரிப்பை முன்னெடுக்க அரசு நடவடிக்கை எடுத்தால் ஆதரவளிப்போம் என்றும் புதிய அரசின் ஒவ்வொரு செற்பாட்டையும் அவதானித்து ஆதரவளிப்பதா எதிர்ப்பதா என்பது குறித்து முடிவெடுப்போம் எனவும் சுமந்திரன் கூறினார்.

மேலும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறிப்பாக அரசியல் தீர்வுப் பிரச்சினை, அன்றாடப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படவேண்டும் என்றும் அரசியல் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்படவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

அத்தோடு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கான நீதி துரிதமாகக் கிடைக்கவேண்டும் எனவும் குறிப்பாக காணாமல் ஆக்கப்பட்டோரில் ஒவ்வொருவருக்கும் என்ன நடந்தது எனக் கண்டறியப்படவேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும் எமது இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் அபிவிருத்தியும் மிக முக்கியமான விடங்கள் எனச் சுட்டிக்காட்டிய சுமந்திரன் இவற்றிற்கு தீர்வை வழங்கினால் நாம் புதிய அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார் எனவும் கூறினார்.

பகிரவும்...