Main Menu

அரச வாகன முறைகேடு: விமல் வீரவன்சவின் ஒருங்கிணைப்புச் செயலாளர் விளக்கமறியலில்

அரச பொறியியல் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான நான்கு வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்தி, அரசாங்கத்திற்கு நிதி நட்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் ஒருங்கிணைப்புச் செயலாளராகக் கடமையாற்றிய கிரிசாந்த பிரதீப் சில்வா என்பவரை, எதிர்வரும் ஜூலை மாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் பசன் அமரசேன இன்று (24) உத்தரவிட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர், தனது பதவிக்குரிய எரிபொருள் மற்றும் போக்குவரத்து கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொண்ட அதேவேளையில், முறையற்ற விதத்தில் அரசு பொறியியல் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான நான்கு வாகனங்களை வாடகை அடிப்படையில் பயன்படுத்தி வந்துள்ளார்.

இந்தச் செயற்பாட்டின் ஊடாக, சுமார் 1.265 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான அரச நிதி முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சந்தேகநபருக்கு பிணை வழங்குவது தொடர்பான உத்தரவை ஜூலை 3 ஆம் திகதி அறிவிப்பதாக நீதவான் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், சந்தேகநபர் சார்பாக முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்ததிஸ்ஸ, தனது சேவை பெறுநர் முதுகெலும்பு தொடர்பான நரம்பு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் பத்து வருடங்களுக்கும் மேலாக நீடிப்பதால் அவரை பிணையில் விடுவிக்குமாறும் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம், இலங்கை தண்டனைச் சட்டக்கோவை மற்றும் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றத்திடம் கோரியிருந்தது.

இதன் அடிப்படையில் குறித்த நபரை எதிர்வரும் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.