Main Menu

தமிழர்கள் பாதுகாப்பான தாயகமொன்றை பெறுவது பற்றிய வழியை நோக்கி நகர வேண்டும்- உறவுகள் அறைகூவல்

தமிழர்கள், பாதுகாப்பான மற்றும் பாதுகாக்கப்பட்ட தாயகமொன்றை பெறுவது பற்றிய வழியை நோக்கி நகர வேண்டுமென வவுனியா காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அறைகூவல் விடுத்துள்ளனர்.

சர்வதேச தந்தையர் தினத்தை முன்னிட்டு, வவுனியா காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுக்கப்பட்ட ஆர்பாட்டத்தின் பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தின்போது அவர்கள் மேலும் கூறியுள்ளதாவது, இன்று மேற்கத்திய உலகில் தந்தையின் நாள்.  தமிழர்களாகிய நாங்கள், இந்த சிறப்பு தினத்தை கொண்டாட ஆரம்பித்துள்ளோம்.

இந்த தந்தையர் தினத்தன்று, சில வாரங்களுக்கு முன்பு காலமான எங்கள் காவலர் தந்தை ஐயா நல்லதம்பிக்கு மீண்டும் அஞ்சலி செலுத்துவதுடன், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இறந்த புலம் பெயர்ந்த தமிழ் தந்தையர்களையும் நாம் நினைவில் கொள்ள விரும்புகிறோம்.

அத்துடன் இங்கு, மூன்று இனங்களையும் சித்திரவதை செய்த இடங்களை கண்டுபிடிக்கும் பெயரில், மூன்று இனங்களையும் ஒன்றாக கொண்டுவருவதற்கான முயற்சி உள்ளது என்பதை நாங்கள் குறிப்பிட விரும்புகிறோம் .

இது, மூன்று இனங்களும் ஒன்றுபட்டது என்ற உணர்வை இறுதியில் உருவாக்கும். இதனால் தமிழர் பிரச்சினை, உள்நாட்டு பிரசனையாக மாற்றப்படும். மேலும் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவின் தலையீட்டை முறிவடையச் செய்யும்.

அத்துடன் அனைத்து சித்திரவதை முகாம்களின் இருப்பிடமும் எங்களிடம் உள்ளது. எனவே இதனை கண்டுபிடிக்க சர்வதேச தலையீடு தேவையில்லை என்று இலங்கை அரசு அந்த பிரச்சினையை முடித்துக்கொள்ளும்.

இலங்கைக்கு சர்வதேச அழுத்தம் வேண்டுமென காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் தாய்மார்கள், முல்லைத்தீவில் கேட்கிறார்கள். ஆனால் இலங்கையை சர்வதேச தலையீட்டிலிருந்து விடுவிக்குமாறு கூட்டமைப்பு தொடர்ந்து கேட்டுவருகின்றது.

அழுத்தம் என்பது மீன்பிடி ஏற்றுமதியை நிறுத்துவது போன்றது. எனவே அழுத்தம் தமிழருக்கு ஒன்றையும் செய்யாது. இது இலங்கையைத்தான் பாதுகாக்கும்.

முல்லைத்தீவு தாய்மார்கள் தங்கள் குழந்தைகளைப் பார்க்க விரும்பினால், இலங்கையில் அமெரிக்க நேரடித் தலையீட்டையே அழைக்க வேண்டும்.

இந்தியாவின் நேரடி இராணுவ தலையீட்டின் மூலம், 1987இல் தமிழர்களுக்கு வட.கிழக்கு மாகாண கட்டமைப்பு உருவாக்கியது. இத்தீர்வு சரியானதா அல்லது பிழையானதா என்பது கேள்வி இல்லை. இதனை நடைமுறைபடுத்திய முறைதான் கவனத்துக்கு உரியது.

அத்துடன் கூட்டாட்சி என்பது தமிழர்களுக்கு பாதுகாப்பான அரசியல் அமைப்பு அல்ல. ஏனெனில் எந்த நேரத்திலும் எந்த மாற்றங்களையும் செய்ய பெரும்பான்மையினருக்கு ⅔ பெரும்பான்மை உள்ளது.

மேலும் பெரும்பான்மையினர், வட.கிழக்கில் எந்தவொரு அரசாங்க கட்டமைப்பையும் அகற்ற இராணுவத்தையும் குண்டர் குழுக்களையும் பயன்படுத்துவதுடன், கூட்டாட்சி என்பது மூன்றிற்குமேற்பட்ட இனம் உள்ள நாட்டில் தான் நடைமுறைக்கு சாத்தியமானது.

எனவே, தமிழர்கள் பாதுகாப்பான மற்றும் பாதுகாக்கப்பட்ட தாயகத்தை பெறுவது பற்றிய வழியை நோக்கி நகர வேண்டும்” என்றனர்.

பகிரவும்...