Main Menu

தமிழர்களுக்கு சமஷ்டி தீர்வு என மீண்டும் மக்களை ஏமாற்ற முயற்சி- வீ.ஆனந்தசங்கரி

மாகாண சபைக்கான தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக சமஷ்டிதான் தீர்வென கூறி மீண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பு  ஏமாற்ற முயற்சிக்கின்றதென தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சி செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக அறிக்கையில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “தற்போது சமஷ்டி என்ற பதம் சிங்களத் தலைமைகளுக்கும் சிங்கள மக்களுக்கும் பிடிக்காத ஒரு சொல்லாகிவிட்டது.

ஆரம்பத்தில் சமஷ்டி என்ற வார்த்தையை சிங்களத் தலைமைகள்தான் பேச ஆரம்பித்தனர். அது ஒரு காலம். பின் அவர்களே தனிச்சிங்கள சட்டம் கொண்டு வந்தார்கள். முள்ளிவாய்க்காலில் யுத்தம் முடிவுக்கு வரும் வரை சமஷ்டி நோக்கித்தான் அனைவரும் செயற்பட்டோம். அதன் பின்னர் இன்று வரை நடக்கும் சம்பவங்களை சம்பந்தன் மறந்துவிட்டாரா?

கடந்த 2015ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தல் மூலம் நல்லிணக்கத்திற்கான ஒரு நல்லாட்சியை மக்கள் உருவாக்கி, ஒரு தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டது. இதற்கும் தாங்கள்தான் காரணம் என சம்பந்தன் கூறி இருந்தார்.

அந்த நல்லாட்சி முழுவதும் இரா.சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவராக நியமனம் செய்யப்பட்டார். ஒரு நாட்டை ஆளும் அரசு வருடா வருடம் சமர்ப்பிக்கப்படும் வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த உலகின் ஒரேயொரு எதிர்க்கட்சித் தலைவர் என்ற பெருமையையும் பெற்றுக் கொடுத்தவர்.

அன்றைய அரசின் ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு மிகவும் நெருக்கமான சகாவாக இருந்து எதிர்கட்சி தலைவர் என்ற கதிரையை அலங்கரித்தவர். அப்போது இந்த சமஷ்டியைப்பற்றி பேசாது அந்த தீர்வை பெற்றுத்தர எந்த முயற்சியும் எடுக்காமல் தனது எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவி பறிபோய்விடும் என்ற பயத்தில் வாய்மூடி மௌனமாக இருந்துவிட்டு, இன்று சமஷ்டி பற்றி பேசுகின்றார்.

தமிழ் மக்களுக்கு சம்பந்தனின் கபட நாடகம் எப்போதும் புரிவதில்லை. அதனால்தான் அவரும் அதனை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றார்.

தமிழ் மக்களுக்கு அவர் ஏதாவது நன்மை செய்ய விரும்பினால், நல்லெண்ணத்துடன் தமிழ் மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டி உருவாக்கும் அணியினருக்கு ஆதரவு தெரிவித்து, இந்திய முறையிலான ஒரு அரசியல் தீர்வை பெற்றுத்தர முயற்சிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...