Main Menu

தமிழக அமைச்சரவை பட்டியல் இன்று வெளியாகிறது

மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பதவி ஏற்றதும் அவருடன் 29 அமைச்சர்கள் பதவி ஏற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெற்றதால் தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.

இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் தி.மு.க.வுக்கு மட்டும் 125 இடங்கள் கிடைத்தது. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட கூட்டணி கட்சியைச் சேர்ந்த 8 எம்.எல்.ஏ.க்களையும் சேர்த்து 133 எம்.எல்.ஏ.க்கள் தி.மு.க.வில் உள்ளனர்.

இதையடுத்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆட்சி அமைக்க கவர்னர் பன்வாரிலால் புரோகித்திடம் நேற்று உரிமை கோரினார். இதையடுத்து கவர்னரின் செயலாளர் ஆனந்தராவ் பட்டீல் நேற்று மதியம் மு.க.ஸ்டாலினை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டுக்கு சென்று சந்தித்தார்.

அப்போது மு.க.ஸ்டாலின் ஆட்சி அமைக்க கவர்னர் விடுத்த அழைப்பு கடிதத்தை கொடுத்தார்.

முக ஸ்டாலின்

இதையொட்டி கிண்டி கவர்னர் மாளிகையில் மு.க.ஸ்டாலின் நாளை காலை 9 மணிக்கு முதல்-அமைச்சராக பதவி ஏற்கிறார். அவருக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பதவி ஏற்றதும் அவருடன் 29 அமைச்சர்கள் பதவி ஏற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, தா.மோ. அன்பரசன், ஈரோடு முத்துசாமி, கீதாஜீவன் உள்பட 9 பேருக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என கூறப்படுகிறது.

இளைஞரணியைச் சேர்ந்த டி.ஆர்.பி.ராஜா, அன்பில்மகேஷ் உள்ளிட்ட 20 புதுமுகங்களுக்கும் அமைச்சரவையில் வாய்ப்பு அளிக்கப்படும் என தி.மு.க. வட்டாரத்தில் பேசப்படுகிறது.

புதிய அமைச்சரவைக்கான பட்டியலை கவர்னரின் பார்வைக்கு மு.க.ஸ்டாலின் அனுப்பி வைத்து விட்டதாகவும் அமைச்சரவையில் இடம் பெறும் அமைச்சர்களின் பெயர் பட்டியல் கவர்னர் மாளிகையில் இருந்து இன்று வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பகிரவும்...