Main Menu

தமிழகத்தில் முதல்தடவையாக ஒரேநாளில் ஐயாயிரம் பேருக்குமேல் தொற்று!

தமிழகத்தில் முதல்தடவையாக ஒரேநாளில் ஐயாயிரம் பேருக்குமேல் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளமை பதிவாகியுள்ளது.

அந்தவகையில், கடந்த 24 மணிநேரத்தில் ஐயாயிரத்து 849 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு ஒரு இலட்சத்து 86 ஆயிரத்து 492 ஆக அதிகரித்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும், இன்று (புதன்கிழமை) ஒரே நாளில் அதிகபட்சமாக 74 பேர் உயிரிழந்துள்ளதுடன் மொத்த மரணங்கள் மூவாயிரத்து  144 ஆக உயர்ந்துள்ளன. நேற்றுவரையான காலப்பகுதியில் இரண்டாயிரத்து 626 ஆக பதிவாகியிருந்த நிலையில் விடுபட்ட மரணங்களாக 444 பேரின் உயிரிழப்புக்களையும் சேர்த்து இன்று மொத்த உயிரிழப்பு மூவாயிரத்தைக் கடந்துள்ளது.

சென்னையில் மட்டும் ஒரேநாளில் ஆயிரத்து 171 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் அங்கு மொத்தமாக 89ஆயிரத்து 561 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன், அதிகபட்சமாக நான்காயிரத்து 910 பேர் குணமடைந்து இன்று வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில், தொற்றிலிருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 31 ஆயிரத்து 583 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத் துறை குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, இன்று அதிகபட்சமாக 60 ஆயிரத்து 112 பேருக்கு கொரோனா பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் தொற்று கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கையிலும் சடுதியாக அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, தமிழகத்தில் தனிநபர் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 20 இலட்சத்தைக் கடந்து 20 இலட்சத்து 15 ஆயிரத்து 147ஆக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...