Main Menu

தமிழகத்தில் பொதுமுடக்கம் நீடிப்பு- தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் எதிர்வரும் மே-31 திகதி வரை பொதுமுடக்கத்தை நீடித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக மத்திய அரசு அறிவித்த 3ஆம் கட்ட ஊரடங்கு உத்தரவு இன்று நள்ளிரவுடன் முடிவுக்குவரும் நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு நீடிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், நெல்லையில் சில தளர்வுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதேவேளை, ஊரடங்கு உத்தரவின்படி, பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் என அனைத்து வித கல்வி நிறுவனங்களுக்கும் விதிக்கப்பட்ட தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வழிபாட்டுத் தலங்களில் வழிபாடு நடத்தவும், மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்தவும் விதிக்கப்பட்ட தடையும் தொடர்கிறது.

பொதுமக்கள் அதிக அளவில் கூடும் திரையரங்குகள், கேளிக்கைக் கூடங்கள், மதுக்கூடங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், கடற்கரை, சுற்றுலாத் தலங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், நீச்சல் குளங்கள், விளையாட்டு அரங்குகள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள் திறக்கப்படுவதற்குமான தடையும் நீடிக்கிறது.

சமய, சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாசார நிகழ்வுகள், விழாக்கள், கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் நடத்தவும் விமானம், ரயில், பேருந்து உள்ளிட்ட பொது போக்குவரத்து, மாநிலங்களுக்கு இடையேயான ரயில் போக்குவரத்து, சென்னை மாநகரத்திலிருந்து பிற பகுதிகளுக்கான ரயில் போக்குவரத்து ஆகியவற்றுக்கான தடையும் தொடர்ந்து நீடிக்கிறது.

அதேசமயம், மத்திய, மாநில அரசின் சிறப்பு அனுமதி பெற்று இயக்கப்படும் விமானம், ரயில், பொதுப்பேருந்து போக்குவரத்து மட்டும் அனுமதிக்கப்படும். மேலும் மெட்ரோ ரயில், மின்சார ரயில் இயக்கத்திற்கும், டக்ஸி, முச்சக்கரவண்டி, சைக்கிள் ரிக்ஷா ஆகியவற்றை இயக்குவதற்குமான தடையும் நீடிக்கிறது.

பணியாளர் விடுதிகள் தவிர பிற தங்கும் விடுதிகள், ஹோட்டல்கள் இயங்க விதிக்கப்பட்ட தடை தொடர்கிறது. திருமண நிகழ்ச்சிகளுக்கு, தற்போது உள்ள நடைமுறைகள் தொடரும் என்றும், இறுதி ஊர்வலங்களில் 20 பேருக்கு மேல் பங்கேற்கக் கூடாது என்றும் திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...