Main Menu

தமிழகத்தில் தளர்வுகளுடன் மீண்டும் ஊரடங்கு நீடிப்பு – தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் தளர்வுகளுடன் ஜூலை 31ஆம் திகதி வரையில் ஊரடங்கு நீடிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதேநேரம், சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் நடைமுறையில் உள்ள முழு ஊரடங்கு, ஜூலை 5ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் 25ஆம் திகதி நாடு தழுவிய ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது.

அதனைத்தொடர்ந்து, பல்வேறு தளர்வுகளுடன் இதுவரை 5 முறை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. 5ஆவது தடவையாக நீடிக்கப்பட்ட ஊரடங்கு இன்றுடன் (செவ்வாய்க்கிழமை) முடிவுக்கு வருகிறது.

இதேநேரம், சென்னை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் நோய்த் தொற்று பரவல் அதிகரித்ததால் கடந்த 19ஆம் திகதி முதல் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது.

அதனைத்தொடர்ந்து, மதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 24ஆம் திகதி முதல் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது.

எனினும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில், மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஆலோசனை நடத்தினார்.

இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளுடன் ஊரடங்கு ஜூலை 31ஆம் திகதி வரை நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

புதிய அறிவிப்பின்படி, அனைத்து மதம் சார்ந்த கூட்டங்கள், நகர்ப்புற வழிபாட்டுத் தலங்களிலும் பெரிய வழிபாட்டுத் தலங்களிலும் வழிபாட்டுக்கான தடை நீடிக்கபட்டுள்ளது.

நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற சுற்றுலா தலங்களுக்கும் வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்படுகிறது.

வணிக வளாகங்கள், பாடசாலைகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள் என அனைத்து கல்வி நிறுவனங்களை திறப்பதற்கான தடை நீடிக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில், மின்சார ரயில் இயக்கத்திற்கான தடை நீடிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகள், நீச்சல் குளங்கள், கேளிக்கை கூடங்கள், மக்கள் கூடும் இடங்களை திறப்பதற்கான தடை, மாநிலங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்து தடை உள்ளிட்டவையும் நீடிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜூலை 5, 12, 19 மற்றும் 26 ஆகிய ஞாயிற்றுக் கிழமைகளில் எந்தவித தளர்வும் இல்லாமல் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...