Main Menu

தமிழகத்திலுள்ள இலங்கை தமிழர்களின் நிலைமை குறித்து கமல்ஹாசன் கருத்து

இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் தப்பித்து தமிழகத்தில் தஞ்சம் புகுந்த இலங்கை தமிழர்களின் நிலை என்னவென மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் கேள்வி யெழுப்பியுள்ளார்.

இந்திய குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் மேலும் கூறியுள்ளதாவது, “இந்தியாவின் முதுகெலும்பு எனச் சொல்லப்படும் கிராமங்களில் விவசாயி தற்கொலை செய்து, உயிரிழந்து கொண்டிருக்கும்போது அதைத் தடுக்க வழி செய்யாமல் மதத்தின் பெயரால் மக்களைப் பிரிப்பது அரசாங்கத்தின் சூழ்ச்சி.

எதிர்காலத்தின் தூண்களான மாணவர்கள் அரசியல் புரிதலுக்காக கேள்வி கேட்கும் போது, கண்ணீர் புகை குண்டுகள் எறிவதும் காக்கிகளைக் கொண்டு தாக்குவதுதான் அரசாங்கத்தின் பதில்.

பொருளாதாரம் பின்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. விலைவாசி விண்ணை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என அனைவரும் கலக்கத்தில் இருக்கும் வேளையில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கான அவசரம் என்ன? என்கிற கேள்வி தான் நாடு முழுவதும் வெடிக்கும் போராட்டத்தின் தொடக்கப் புள்ளியே.

பாகிஸ்தான் இந்துவுக்கு வழங்கப்படும் உரிமையை இலங்கை இந்துவுக்கு ஏன் வழங்கப்படவில்லை ?ஆண்டுகாலமாக தமிழகம் தோள் கொடுக்கும் என்று நம்பும் இலங்கைத் தமிழர்களுக்கு நாம் சொல்லப்போகும் பதில்?

முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின்போது  தப்பி, தமிழகத்தில் தஞ்சம் அடைந்தவர்களின் நிலை இனி என்ன? கேள்விகளுக்கு விடை அளிப்பதை விடுத்து கேள்வி கேட்பவனின் குரலை ஒடுக்கும்வேலைதான் டெல்லியிலும், அலிகரிலும், அசாமிலும் நடக்கிற அரச பயங்கரவாதம்.

மாணவர்கள் மேல் விழும் ஒவ்வொரு அடியும் இந்திய ஜனநாயகம் வழங்கிய கருத்துரிமை மேல் விழும் அடி. கேள்வி கேட்கவே பயப்படவேண்டும் என்கிற எண்ணத்தை எதிர்காலத் தலைமுறைக்கு ஏற்படுத்த விழும் அடி. கேட்கப்படும் கேள்விகளுக்கு நேர்மையான பதில் இல்லாததால் மாட்டிக்கொள்வோமோ என்ற பயத்தில் விழும் அடி.

மாணவனுக்குப் பதில் இல்லை, விவசாயிக்கு வாழ வழியில்லை, பெண்களுக்குப் பாதுகாப்பில்லை, பொருளாதாரம் சரியில்லை, குற்றங்கள் கட்டுக்குள் இல்லை, வேலை வாய்ப்பு இல்லவே இல்லை, எதை சாதிக்க இத்தனை அவசரமாக இந்தச் சட்டம். கேள்விக்கு நேர்மையான பதில் இல்லை.

இந்த அரசு செய்யும் வேலைகளை எல்லாம் உலக வரலாறு முன்பே கண்டிருக்கிறது. இனத்தின் பெயரால் நாட்டைப் பிரித்து புதிய நாடு பிறந்து விடும் என ஆசை வார்த்தை பேசி, சட்டத் திருத்தங்களை தனக்குச் சாதகமாக்கி செய்தவர்கள் அடுத்து என்ன செய்வார்கள் என்பதற்கான பதில் வரலாற்றின் இருண்ட பக்கங்களில் உள்ளது. அந்த வரலாற்றின் முடிவு எப்போதும் மக்களின் கையில்தான் இருந்திருக்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...