Main Menu

‘தன்னிறைவு இந்தியா’- புதிய திட்டம் குறித்து நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

கொரோனா வைரஸ் தாக்கத்தையடுத்து 5 இலட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு ‘தன்னிறைவு இந்தியா’ என பெயரிடப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி நேற்றிரவு நாட்டு மக்களிடம் உரையாற்றும் போது, பொருளாதாரத்தை மீட்டும் வகையில் 20 இலட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிதியில் இருந்து சிறு, குறு நடுத்தர தொழில்களை மேம்படுத்தவும் அனைத்து தரப்பினரின் நலனுக்காகவும் சிறப்புத் திட்டங்கள் அமுல்படுத்தப்படும் என்றும் அறிவித்தார்.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள 20 இலட்சம் கோடி ரூபாய்க்கான திட்டங்கள் எவை என்பது குறித்த விரிவான விபரங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டுள்ளார்.

இதன்போது, பொருளாதாரம், கட்டமைப்பு, தொழிநுட்பம், மனிதவளம் மற்றும் தேவை ஆகிய ஐந்தும் வளர்ச்சியின் தூண்கள் என அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், ‘சுயசார்பு பாரதம்’ என்ற பெயரில் திட்டங்கள் செயற்படுத்தப்படும் என்பதுடன் சிறப்புத் திட்டங்கள் மூலம் இந்தியா தன்னிறைவு அடைந்து உலகிற்கும் உதவும் என அவர் கூறியுள்ளார்.

மேலும், தொழில்களை நடத்துவது எளிதாக்கப்படுவதுடன் இந்திய வர்த்தக சின்னங்களை சர்வதேச அளவில் கொண்டுசெல்ல இத்திட்டம் பயன்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பொருளாதாரம், உட்கட்டமைப்பு, மனிதவளம், உற்பத்தி தொழில்நுட்பத்தை மையமாக்கி திட்டங்கள் தயாரிக்கப்படும் என்றும் உள்ளூர் பொருட்கள் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்பதை பிரதமர் அடிப்படையாகத் தெரிவித்துள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் சுட்டிக்காட்டியுள்ளார்.

பகிரவும்...