Main Menu

தடுத்து வைக்கப் பட்டுள்ள டுபாய் இளவரசி – ஐ.நா விசாரணை!

தடுத்து வைக்கப்பட்டுள்ள டுபாய் இளவரசி குறித்து விசாரணை நடத்தவுள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் அமைப்பு ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திடம் தெரிவித்துள்ளது.

டுபாய் ஆட்சியாளர் ஷேக் முகமது பின் ராஷித் அல் மக்தூமின் மகள் இளவரசி ஷேய்க்கா லதீஃபா தாம் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளதாகவும், தம் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்றும் காணொளியில் தெரிவித்துள்ளார்.

2018 மார்ச்சில், ஐக்கிய அரபுச் சிற்றரசுகளிலிருந்து அவர் கடல் மார்க்கமாய்த் தப்ப முயன்றார். அதன் பிறகு அவர் பொது வெளியில் காணப்படவில்லை.

அவர் சிறைப்பிடிக்கப்பட்டு சுமார் ஓராண்டுக்குப் பிறகு எடுக்கப்பட்ட காணொளிகளை பிபிசி செய்தி நிறுவனம் வெளியிட்டது.

சிறையாக மாற்றப்பட்டுள்ள மாளிகையில் தாம் அடைக்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் அதிகாரிகள் அங்கு பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும் கைதொலைப்பேசி மூலம் எடுக்கப்பட்ட காணொளியில் லதீஃபா குறிப்பிட்டார்.

அந்தக் காணொளிகள் தங்களுக்கும் கிடைக்கப் பெற்றுள்ளதாகக் கூறிய Sky News, கடந்த 9 மாதங்களாக லதீஃபாவைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.

அந்தக் காணொளிகள் சர்வதேச கவனம் பெற்றுள்ளதால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்பு இது தொடர்பில் கரிசனை செலுத்தியுள்ளது.

இவ்விடயம் குறித்து விசாரணை நடத்தவுள்ளதாகவும் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்துடன் பேசவுள்ளதாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

பகிரவும்...