Main Menu

டைக்ரே மோதலில் கொத்துக் கொத்தாக மக்களைக் கொன்றது எரித்திரியப் படை- மன்னிப்புச் சபை அறிக்கை!

எத்தியோப்பியாவின் டைக்ரே பிராந்தியத்தில் கடந்த ஆண்டு இறுதியில் இடம்பெற்ற மோதலில், ஒரே நாளில் நூற்றுக்கணக்கான பொதுமக்களை எரித்திரியப் படைகள் கொன்றதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

எத்தியோப்பிய அரசாங்கத்துடன் இணைந்து எரித்திரியப் படைகளும் சுயாட்சிப் பிராந்தியமான டைக்ரே மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், மனித குலத்திற்கு எதிராக மாபெரும் குற்றம் இடம்பெற்றுள்ளதாக மன்னிப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.

வடக்கு எத்தியோப்பியாவின் பழங்கால நகரமான ஆக்சூமில் எரித்திரியத் துருப்புக்களால் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக 41 சாட்சிகள் பதிவாகியுள்ளதாக மன்னிப்புச்சபை குறிப்பிட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுக்களை, எரித்திரியா நிராகரித்துள்ள போதும், எத்தியோப்பிய மனித உரிமைகள் அமைப்பு ஒரு அறிக்கையில், சில விபரங்களைச் சுட்டிக்காட்டிய நிலையில், எரித்திரியத் துருப்புக்கள் மோதலில் பங்கேற்றன என்பது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில், நவம்பர் 28 முதல் 29 வரையான 24 மணிநேர காலப்பகுதியில், எரித்திரியப் படைகளால் இந்தக் கொலைகள் நடத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ள மன்னிப்புச்சபை, எத்தியோப்பிய அரசாங்கப் படைகள் டைக்ரேயின் பிராந்திய தலைநகர் மெக்கெல்லை தனித்தனியாகக் கைப்பற்றிய திகதியுடன் இது ஒத்துப்போவதாகக் கூறியுள்ளது.

அத்துடன், உள்ளூர் போராளிகளின் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தக் கொலைகள் நடந்ததாகவும், எரித்திரிய வீரர்கள் குறித்த பகுதியில் ஆண்களையும் சிறுவர்களையும் தெருக்களில் தூக்கிலிட்டுக் கொன்றதாகவும் மன்னிப்புச்சபை குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, எரித்திரிய அரசாங்கம், தனது நாட்டுப் படைகள் அண்டைப் பிராந்தியத்தில் ஏற்பட்ட மோதலில் பங்கேற்றதைத் தொடர்ந்து மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...