Main Menu

சவுதி இளவரசர் உத்தரவின் பெயரிலேயே ஜமால் கஷோக்கி கொல்லப்பட்டார்: அமெரிக்க புலனாய்வு அறிக்கை!

சவுதி இளவரசர் மொஹம்மத் பின் சல்மானின் உத்தரவின் பெயரிலேயே, பிரபல ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி கொல்லப்பட்டதாக அமெரிக்க புலனாய்வு அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

இதுதொடர்பான அமெரிக்காவின் அறிக்கையில், ‘துருக்கியில் சவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியை உயிருடன் பிடிக்க அல்லது கொல்லும் திட்டத்திற்கு சவுதியின் இளவரசர் மொஹம்மத் பின் சல்மான் ஒப்புதல் அளித்ததாக நாங்கள் மதிப்பிடுகிறோம்’ என அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குநரக அலுவலக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சவுதி இளவரசர் மொஹம்மத் பின் சலமான் கஷோக்கியின் கொலைக்கு ஒப்புதல் அளித்தார் என்று கூறுவதற்கான மூன்று காரணங்களையும் அமெரிக்கா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

2017ஆம் ஆண்டில் இருந்து அந்நாட்டுக்கான அனைத்து முடிவுகளையும் எடுக்கும் கட்டுப்பாடு அவருக்குதான் இருக்கிறது.

இளவரசர் சல்மானின் ஆலோசகர்களில் ஒருவரும் மற்றும் பல பாதுகாப்பு தகவல்களுக்கு உட்பட்ட சில உறுப்பினர்களும்தான் இந்த கொலையில் நேரடியாக ஈடுபட்டனர்.

வெளிநாட்டில் இருக்கும் எதிர்ப்பாளர்களை வன்முறையுடன் அடக்குமுறை செய்வதற்கு அவர் வழங்கும் ஆதரவு
கஷோக்ஜியின் கொலைக்கு பொறுப்பானவர்கள் என குற்றம்சாட்டப்படும் தனிநபர்களின் பெயர்களும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், எவ்வளவு காலத்திற்கு முன் அவர்கள் இதனை திட்டமிட்டனர் என்று தெரியவில்லை என்று அதில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக டசன் கணக்கான சவுதி நாட்டவர்களுக்கு தடை விதித்த அமெரிக்கா, இளவரசர் மீது எந்த தடையும் விதிக்கவில்லை.
இந்நிலையில் அமெரிக்காவின் அறிக்கையை எதிர்மறையானது, தவறானது, ஏற்றுக் கொள்ள முடியாதது என்று குறிப்பிட்டுள்ள சவுதி அரேபியா அதனை நிராகரித்துள்ளது.

தற்போது சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசராக செயற்படும் மொஹம்மத் பின் சல்மான், தன் மீதான இந்த குற்றச்சாட்டை மறுத்து வருகிறார்.

இந்த அறிக்கை வெளியான ஒரு சில மணி நேரங்களிலேயே ‘கஷோக்கி தடை’ என்ற பெயரில் ஒரு சில பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பதாக அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செயலாளர் அண்டனி ப்ளின்கென் அறிவித்தார்.

கஷோக்ஜியின் கொலையில் நேரடியாக சம்மந்தப்பட்ட நபர்கள் தீவிர அதிருப்தி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக’அவர் குறிப்பிட்டார்.

மேலும், எந்த ஒரு வெளிநாட்டு அரசாங்கத்தின் அதிருப்தியாளர்களை இலக்காக வைக்கும் எந்த குற்றவாளிகளையும் அமெரிக்க மண்ணில் அனுமதிக்கக் கூடாது’ என்றும் ஆண்டனி எச்சரித்தார்.

59 வயதான ஜமால் கஷோக்கி 2017ஆம் ஆண்டில் தனது தாய் நாடான சவுதியில் இருந்து வெளியேறி அமெரிக்காவில் தஞ்சம் அடைந்தார். இவர் சவுதி அரச குடும்பத்தின் தீவிர விமர்சகர்.

இவர் 2018ஆம் ஆண்டு துருக்கியில் உள்ள சவுதி துணைத் தூதரகத்திற்கு சென்றபோது, கொலை செய்யப்பட்டார்.

பகிரவும்...