Main Menu

ஜோ பிடன் இந்தியா உடனான வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும் – தொழிலதிபர்கள் கோரிக்கை!

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்க உள்ள ஜோ பிடன் இந்தியா உடனான வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்து பரஸ்பர நல்லுறவு தொடரும் என்ற அறிகுறியை வெளிப்படுத்த வேண்டும் என அமெரிக்கா வாழ் இந்திய தொழிலதிபர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து அமெரிக்க – இந்திய திட்டம் மற்றும் கூட்டுறவு கூட்டமைப்பின் தலைவர் முகேஷ் அகி  அமெரிக்கா – இந்தியா இடையிலான பரஸ்பர நல்லுறவு தொடர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இரு நாடுகளும் ஏற்கனவே பேசி தீர்வு கண்ட சிறிய அளவிலான வர்த்தக ஒப்பந்தத்தை ஜோ பிடன் இறுதி செய்ய வேண்டும் எனவும் அதன் பின்னர்  பெரிய அளவிலான வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை  நடத்தலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் வளரும் நாடுகளுக்கான வர்த்தகப் பொருட்கள் முன்னுரிமை அந்தஸ்தை இந்தியாவுக்கு மீண்டும் வழங்க வேண்டும்  எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வளரும் நாடுகளுக்கான வர்த்தகப் பொருட்கள் முன்னுரிமை அந்தஸ்து பட்டியலில் இருந்து இந்தியாவை நீக்கினார்.

தங்களின் தகவல் மற்றும் தொலைதொடர்பு தொழில்நுட்ப பொருட்களுக்கு இறக்குமதி வரியை குறைக்கும்படி அமெரிக்கா தெரிவித்தது. அத்துடன் வேளாண் மற்றும் பண்ணைப் பொருட்கள் வாகன உதிரிபாகங்கள் போன்றவற்றின் இறக்குமதியை அதிகரிக்கவும் வலியுறுத்தியது. இது தொடர்பாக இந்தியா – அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதில் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டதை அடுத்து அமெரிக்க அரசியல் சூழல் அனுமதித்தால் விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என மத்திய வர்த்தக அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...