Main Menu

ஜெனிவா தீர்மானம் சட்டவிரோதம், ஏற்றுக்கொள்ள முடியாது- கோத்தாபய ராஜபக்ச

சிறிலங்கா தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சட்டவிரோதமானது என்றும், அதனை தமது அரசாங்கம் ஏற்றுக் கொள்ளாது என்றும் பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பு- ஷங்ரி லா விடுதியில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

‘சர்ச்சைக்குரிய பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பாக, ஐ.நா மற்றும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையுடன் இணைந்து செயற்படுவோம்.

ஆனால்,  சிறிலங்கா தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் பேரவை தீர்மானத்தை அங்கீகரிக்க முடியாது. அந்த தீர்மானம் நாங்கள் கையெழுத்திட்டதல்ல.

வேறு அரசாங்கங்களால் செய்து கொள்ளப்பட்ட உடன்பாடுகளை அங்கீகரிக்க முடியாது. அது சட்டரீதியான உடன்பாடு அல்ல என்பது, எனது தனிப்பட்ட கருத்து.” என்று கூறினார்.

இந்தச் சந்தர்ப்பத்தில் இடையிட்டு கருத்து வெளியிட்ட பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்,

“ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு வழங்கப்பட்ட சில வாக்குறுதிகளை நிறைவேற்றுவது சிறிலங்கா அரசியலமைப்புக்கு முரணானது என்று தற்போதைய அரசாங்கமே திட்டவட்டமாகக் கூறியுள்ளது.

தற்போதைய அல்லது எதிர்கால அரசாங்கமும் அரசியலமைப்புக்கு முரணான நடவடிக்கை எடுக்க முடியாது” என்று கூறினார்.

பகிரவும்...