Main Menu

ஜி20 அமைப்புக்கு தலைமை ஏற்கிறது இந்தியா

ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்க உள்ளது. வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் அடுத்த ஆண்டு நவம்பர் 30ம் தேதிவரை இந்தியா இந்த பொறுப்பில் இருக்கும். இந்த காலகட்டத்தில் நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் 200க்கும் மேற்பட்ட கூட்டங்களை நடத்த உள்ளது. இந்நிலையில், இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்திற்கான லோகோ, கருப்பொருள் மற்றும் இணையதளத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளியிட்டார் அப்போது பேசிய அவர், இந்தியாவின் ஜி20 தலைமை பதவியில் இருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் நாட்டு மக்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

‘இந்தியா இப்போது ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்க உள்ளது. இது, சுதந்திரத்தின் 75வது ஆண்டில் இந்தியாவுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும், இது நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் அதிக பெருமையை கொண்டு வரும். சுதந்திரத்திற்குப் பிறகு அனைத்து அரசாங்கங்களும், இந்திய மக்களும் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதில் தங்களின் பங்களிப்பை வழங்கினர். உலகை நம்முடன் அழைத்துச் செல்லும்போது, நாமும் புதிய ஆற்றலுடன் முன்னேற வேண்டும்’ என மோடி குறிப்பிட்டார். சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளில் பங்களிக்க ஜி20 தலைவர் பதவி இந்தியாவிற்கு ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது என்று வெளியுறவு அமைச்சகம் திங்களன்று கூறியுள்ளது. இந்தியாவின் ஜி20 தலைமை பதவியின் லோகோ, கருப்பொருள் மற்றும் இணையதளம் ஆகியவை நாட்டின் செய்தி மற்றும் முன்னுரிமைகளை உலகிற்கு பிரதிபலிக்கும் என்றும் கூறியது.

பகிரவும்...