Main Menu

ஜி-7 நாடுகள் பட்டியலில் மீண்டும் ரஷ்யா இடம்பெற கனடா- பிரித்தானியா எதிர்ப்பு!

ஜி-7 நாடுகள் பட்டியலில் மீண்டும் ரஷ்யா இடம்பெற வேண்டும் என்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் விருப்பத்தை கனடா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் எதிர்த்துள்ளன.

ஜி-7 மாநாட்டில் கலந்துகொள்ள முடியாத நாடுகளுக்கு கால நீட்டிப்பு வழங்கி, ரஷ்யாவையும் இணைத்து ஜி-7 அமைப்பை விரிவாக்க வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி கூறியிருந்தார்.

இந்தநிலையில், கனடா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளுடன் ரஷ்யா நல்ல உறவில் இல்லாததன் காரணமாக, இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இதுகுறித்து கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறுகையில், ‘பல ஆண்டுகளுக்கு முன்பு கிரீமியா மீது ரஷ்யா படையெடுத்ததால் ஜி-7இல் இருந்து வெளியேற்றப்பட்டது. இருப்பினும் ரஷ்யா தொடர்ந்து சர்வதேச விதிகளை மீறி செயற்படுவதால், ஜி-7 அமைப்பில் இருந்து ரஷ்யா விலகியே இருக்கவேண்டும்’ என கூறினார்.

இதுதொடர்பாக பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘ரஷ்யா நடத்தும் வலிய தாக்குதல்களையும் மேற்கொள்ளும் கடுமையான நடவடிக்கைகளையும் அது நிறுத்திக்கொள்ளாவிட்டால், ஜி-7இல் ரஷ்யா இடம்பெறுவதை பிரித்தானியா ஆதரிக்காது 2014ஆம் ஆண்டு கிரீமியா மீது படையெடுத்த காரணத்தால் ரஷ்யா விலக்கி வைக்கப்பட்ட பிறகும் கூட ரஷ்யாவின் நடவடிக்கைகளில் எந்த மாற்றமும் இல்லை’ என கூறினார்.

இந்த ஆண்டு அமெரிக்கா நடத்தும் ஜி-7 உச்சி மாநாட்டில் கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். நாடுகள் இடையேயான கூட்டு முயற்சி, ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

இந்தமாதம் நடைபெறவிருந்த ஜி-7 உச்சி மாநாடு, எதிர்வரும் செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டு ஜி-8 என அழைக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இருந்து ரஷ்யா வெளியேற்றப்பட்டது. கிரீமியா பிராந்தியத்தை ரஷ்யா தம்முடன் இணைத்துக்கொண்டதை எதிர்த்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பகிரவும்...