Main Menu

ஜனநாயக ரீதியாக போராடும் தரப்பை ஒடுக்கும் வகையில் அரசாங்கம் செயற்படுகிறது – சஜித்

அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக ஜனநாயக ரீதியாக போராடும் தரப்பை ஒடுக்கும் வகையில் அரசாங்கம் செயற்பட்டு வருகிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இலங்கை அரசாங்கம் ஊடக சுதந்திரத்தை இல்லாது செய்ய முயற்சிப்பதாக தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தியினரால் இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “அரசமைப்பை பாதுகாத்து மனித உரிமையை பாதுகாக்கும் உரிமை அனைத்து மக்களுக்கும் உள்ளது.

இதனை இல்லாது செய்வதை நாம் பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம். இன்று மக்களின் வாழ்வாதாரம் உயர்வடைந்துள்ளது.

விவசாயிகளுக்கு உறம் இல்லாது போயுள்ளது. பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் இல்லாது போயுள்ளது. கடல் உள்ளிட்ட சுற்றாடல் வளம் அழிவடைந்துள்ளது. மாணவர்களின் கல்வி முற்றாக பாதிக்கப்பட்டது.

தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் மந்தக்கதியில் இடம்பெறுகின்றன. இவையணைத்துக்கும் தீர்வொன்றை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியே மக்கள் போராடுகிறார்கள்.

இதனை மேற்கொள்ளாமல், அரசாங்கம் மக்கள் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுவதானது வெட்கத்துக்குரியதாகும்.

அச்சுறுத்தல்களை விடுத்தோ சுற்றுநிரூபங்களை வெளியிட்டோ மக்களின் குரல்களை நசுக்கிவிட முடியாது என்பதை அரசாங்கம் நினைத்துக்கொள்ள வேண்டும்.

நாம் எதிர்க்கட்சியாக இருந்துகொண்டு எதிர்ப்பினை மட்டும் வெளியிட்டுக்கொண்டிருக்காமல், கொரோனா ஒழிப்பு செயற்பாடுகளுக்கு முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்கத் தயாராகவே இருக்கிறோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.

பகிரவும்...