Main Menu

சேனாதிராஜா தொடர்பாக ஆனந்தசங்கரி குற்றச்சாட்டு

தேர்தலில் தோல்வியடைந்து விட்டு  நாடாளுமன்ற உறுப்பினராவதற்காக அழுதுகொண்டு திரிந்த சேனாதிராஜாவுக்கு நியமன உறுப்பினர் பதவியை வழங்கியது நான்தான் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார்.

வவுனியாவில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “கடந்த காலத்தில் பல்வேறு அமைப்புகள் ஒன்றாக இருந்து உருவாக்கிய ஒற்றுமை, தற்போது மோசமான நிலைக்கு சென்றுள்ளது.

தமிழர் விடுதலை கூட்டணி சில்லறை கட்சியல்ல. மட்டக்களப்பில் குத்தகைக்கு விட்டிருப்பதாக சொல்கிறார்கள். அவ்வாறு, நாம் யாருக்கும் குத்தகைக்கு கொடுக்கவில்லை. ஆனால் அங்கு ஒருவரை வாடகைக்கு பெற்றுள்ளார் சேனாதிராஜா. வரலாறு தெரியாதவர்களே இவ்வாறு கதைக்கின்றனர்.

தங்களது மோசமான நிலையை மூடிமறைப்பதற்காக அனைத்து பழியையும் எம்மீது போடுகின்றனர். அன்றிலிருந்து இன்று வரை தமிழர் விடுதலைக்கூட்டணி எந்தவிதமான தப்பினையும் செய்யவில்லை. மக்களை காட்டியும் கொடுக்கவில்லை அவர்களுக்கு விரோதமான செயற்பாடுகள் எதனையும் செய்யவில்லை.

தந்தை செல்வா கூட்டணி அமைத்த உடனேயே தமிழரசு கட்சி மூடப்பட்டுவிட்டதுடன், தமிழரசு கட்சியும், தமிழ் காங்கிரசும் ஒன்று சேர்ந்துவிட்டது.

அதன் பின்னர் அவர் உயிருடன் இருந்த 2 வருடங்களும், இறந்த பின்னர் 26 வருடங்களும் மொத்தமாக 28 வருடங்கள் இயங்காமல் இருந்த தமிழரசுக் கட்சியை, தமிழ்செல்வன் அங்கிகரித்ததுடன் விடுதலைப்புலிகள் சார்பில் நியமனப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அந்த தேர்தலில் கூட்டணியை, ஒரு சிறிய கூட்டமோ சிறிய கருத்தரங்கோ வைக்கவிடவில்லை. கூட்டணிக்காக ஒருவரும் வாகனம் ஓட்ட முடியாது. அனைத்து வாகனங்களும் தமிழ் கூட்டமைப்பிற்குத்தான் ஓடமுடியும் என்றனர். கூட்டணிக்கு ஆதரவானவர்களிடம் சென்று வாக்கு சீட்டை பெற்றுக்கொண்டனர்.

வாக்கு போடுவதற்காக அரசாங்க உத்தியோகத்தர்கள் உட்பட பலரை அனுப்பினார்கள். அவர்களுக்கு வேலை, கள்ள ஓட்டுபோடுவதுதான். துரோகிகள்,  பாடசாலை மாணவர்களையும் பயன்படுத்தினார்கள். கூட்டமைப்பிற்கு வாக்கு போடுபவர்களை தவிர மற்றவர்களின் வாக்குகளை தாங்களே போட்டனர்.

இறுதியில் கீழ்தரமாக பிரச்சாரம் செய்து மக்களை வெருட்டி பலரும் தோல்வியடைந்த நிலையில், வரலாறு காணாத நிலையில் 22 பேர் வெற்றி பெற்றிருந்தனர்.

ஒருவருக்கு ஒரு இலட்சத்து இருபதாயிரம் வாக்குகள் எங்கிருந்து வந்தது. காலையில் தோல்வியடைந்த சேனாதிராஜா மாலையில் வெற்றியடைகின்றார்.

இவர்கள் ஆடை அணிந்து எப்படி வீதியால் பயணிக்கின்றார்கள் என்று எமக்கு தெரியவில்லை. இது உலகம் முழுக்க தெரிந்தகதை.

சேனாதிராஜாவின் வாகன அனுமதிப்பத்திரத்தை 40 மில்லியனுக்கு விற்றார்கள். நேற்றுப்பிறந்த புதிய தலைவர் சுமந்திரன் 62 மில்லியனுக்கு அனுமதிபத்திரம் எடுத்திருக்கின்றார். இந்த விடயங்களை சம்பந்தர் கதைக்கமாட்டார். அவருக்கு பல அனுமதிப்பத்திரங்கள் இருக்கின்றது.

ஏனெனில் நியமன உறுப்பினர்களாக இருப்பவர்களும் அவருக்குதானே பத்திரங்களை கொடுப்பது. நான் எந்த இயக்கத்தையும் பேசவில்லை. ஒவ்வொரு இயக்கமும் என்ன செய்தது என்று அனைவருக்கும் தெரியும்.

தன்னை நாடாளுமன்ற உறுப்பினராக்காவிட்டால் கட்சியைவிட்டு போயிருவேன் என்று சொன்னவர் தான் சேனாதிராஜா. அவருக்கு நானே பதவியை கொடுத்தேன் இல்லை என்று சொல்லட்டும் பார்ப்போம்.

அதனையடுத்து மூன்று வருடங்களிற்கு பின்னர் வந்த தேர்தலில் தோல்வியடைந்து தனக்கு ஓய்வூதியம் இல்லை என்று அழுதுகொண்டு திரிந்தார். இரண்டாம் தரமும் நியமன உறுப்பினராக அவரை நானே நியமித்தேன். இது தான் வரலாறு” என தெரிவித்தார்.

பகிரவும்...