Main Menu

சென்னையில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலம்: கிறிஸ்தவ தேவாலயங்கள் களைகட்டியது

கொரோனா காரணமாக கடந்த ஆண்டு களையிழந்து காணப்பட்ட கிறிஸ்துமஸ் பெருவிழா, இந்த ஆண்டு மீண்டும் விமர்சையாக கொண்டாடப்பட்டது.சென்னை :

கிறிஸ்துமஸ் பெருவிழா உலகம் முழுவதும் கோலாகலமாக இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. நள்ளிரவு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

இந்த பிரார்த்தனை கூட்டத்தில் ஏராளமான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனர்.

கிறிஸ்தவ தேவாலயங்களில் இயேசு கிறிஸ்து பிறப்பை விளக்கும் வகையில் பல்வேறு வகையான குடில்கள் அமைக்கப்பட்டிருந்தன. தேவாலயங்கள் முழுவதும் வண்ண விளக்குகளால் மற்றும் அலங்கார தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. கிறிஸ்தவ மக்கள் புத்தாடைகள் அணிந்து பிரார்த்தனை நிகழ்ச்சிக்கு ஆலயங்களுக்கு வந்திருந்தனர்.

சென்னை மயிலாப்பூர், எழும்பூர், புரசைவாக்கம், அண்ணாநகர், கிண்டி சாந்தோம், அடையாறு, பெசன்ட் நகர், உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் இன்று காலை சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டு உற்சாகமாக கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடினார்கள்.

சென்னை பெசன்ட் நகர் வேளாங்கண்ணி தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் பலர் குடும்பத்துடன் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். அதேபோல் எழும்பூரில் தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சி நடந்தது.

சாந்தோம் தேவாயலயத்தில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் கிறிஸ்துவ மக்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டதுடன், இனிப்புகளை பரிமாறி கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடி மகிழ்ந்தார்கள். ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார்கள் மேலும் தேவாலயங்களில் உள்ள கிறிஸ்துமஸ் குடில்களில் செல்பி போட்டோக்கள் எடுத்து மகிழ்ந்தார்கள்.

கொரோனா காரணமாக கடந்த ஆண்டு களையிழந்து காணப்பட்ட கிறிஸ்துமஸ் பெருவிழா, இந்த ஆண்டு மீண்டும் விமர்சையாக கொண்டாடப்பட்டது.

பகிரவும்...