Main Menu

சுற்றுச்சூழல் தினம்- விவேக்கின் பணியில் நமது பங்காக நாமும் நடுவோம் ஒரு மரம் வேலைத்திட்டம்

முப்பத்திமூன்று இலட்சத்துக்கும் அதிகமான மரங்களை நடுகை செய்த நடிகர் விவேக்கின் நினைவாக, சுற்றுச்சூழல் தினத்தன்று இலங்கையில் மரநடுகைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம், தனது சுற்றுச்சூழல் தின நிகழ்வினை இம்முறை இணையத்தின் ஊடாக ஏற்பாடு செய்திருந்தது.

இதன்போது தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் மரக்கன்றுகளை வழங்கி வைத்து,  மரக்கன்றொன்றை நடுகை செய்து இத்திட்டத்தை ஆரம்பித்து வைத்திருந்தார்.

இணையத்தில் சூம் செயலியின் ஊடாக குறித்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்த நூற்றுக்கும் அதிகமானவர்கள் தத்தமது வீடுகளிலேயே மரநடுகையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இந்த நிகழ்வு தொடர்பாக பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளதாவது, “நடிகர் விவேக், முப்பத்திமூன்று இலட்சத்துக்கும் அதிகமான மரங்களை நடுகை செய்துள்ளார்.

அவர் உயிரிழந்தப்போதும் கூட அவரின் ரசிகர்கள், மரக்கன்றுகளை நாட்டி, அவருக்குப் பசுமை அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் இலங்கையிலுள்ள அவரது ரசிகர்கள், எம்மிடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய, சூழல் தினத்தில் நடிகர் விவேக்கின் பணியில் நமது பங்காக நாமும் நடுவோம் ஒரு மரம் என்ற திட்டத்தை, இன்பத்தமிழ் வானொலியின் அனுசரணையுடன் ஆரம்பித்துள்ளோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...