Main Menu

சீரற்ற வானிலை 70,000 ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் பாதிப்பு

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாடு முழுவதும் இதுவரை 70,000 ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய 70,957 குடும்பங்களை சேர்ந்த 35,906 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

இதேவேளை கிழக்கு, ஊவா மற்றும் பொலன்னறுவை மாவட்டத்தில் நிலவும் மழையுடனான காலநிலை தொடரும் எனவும் அதேபோல் நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் வேளையில் மழை பெய்யும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

குறிப்பாக மட்டக்களப்பு, அம்பாறை, பதுளை, மொனராகலை, நுவரெலியா, மாத்தளை மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் இடைக்கிடையே இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் அதேபோல் வடமாகாணம் மற்றும் அனுரதாரபுரம் மாவட்டங்களிலும் மழை பெய்யக் கூடும் எனவும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேபோல் ஏனைய பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

சப்ரகமுவ, மேல், மத்திய மற்றும் தென் மாகாணத்தின் சில பகுதிகளில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் பதுளை, மொனராகலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களின் சில இடங்களில் 75-100 மில்லிமீற்றர் வரையான மழை வீழ்ச்சி பதிவாகும் எனவும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் வீசும் தற்காலிக காற்றினால் ஏற்படும் அனர்த்தங்களில் இருந்து மக்கள் தம்மை தற்காத்துக்கொள்ள வேண்டும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

பகிரவும்...