Main Menu

சிரியாவில் ரஷ்யா யுத்த குற்றங்களை இழைத்துள்ளது – ஐ.நா.

சிரியாவில் ரஷ்யா யுத்த குற்றங்களை இழைத்துள்ளது என சிரியா தொடர்பாக மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் ஐ.நா. குழுவொன்று குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

2019 யூலை முதல் இந்த வருட ஆரம்பம் வரையான காலப்பகுதிவரை சிரியாவில் இடம்பெற்ற சம்பவங்களை அடிப்படையாக வைத்து சிரியா தொடர்பான சுயாதீன சர்வதேச விசாரணை ஆணைக்குழு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அந்தவகையில் ரஷ்ய விமானங்கள் பொதுமக்களின் நிலைகள் மீது நேரடியாக தாக்குதல்களை மேற்கொண்டன என்பதற்கான அதிக ஆதாரங்கள் காணப்படும் இரு சம்பவங்கள் குறித்து விசாரணை ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளது.

மராட் அல் நுமான் என்ற பகுதியில் உள்ள சந்தையொன்றின் மீது  கடந்த வருடம் 22 ம் திகதி இடம்பெற்ற தாக்குதல் குறித்தும் இந்த தாக்குதலில் நான்கு சிறுவர்கள் உட்பட 43 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 109 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இரண்டாவது தாக்குதல் ஹாஸ் என்ற பகுதியில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த பகுதியொன்றில் இடம்பெற்றது என குறிப்பிட்டுள்ள ஐ.நா. விசாரணை குழு தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலில் நான்கு குழந்தைகள் 08 பெண்கள் உட்பட 20 ற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர் என ஐநா தெரிவித்துள்ளது.

இரண்டு தாக்குதல்களிலும் ரஸ்ய விமானங்கள் இராணுவ இலக்கொன்றின் மீது தாக்குதலை மேற்கொள்ளவில்லை என்றும் மாறாக பொதுமக்கள் இலக்குகள் மீது கண்மூடித்தனமான தாக்குதலை மேற்கொண்டு யுத்தகுற்றங்களை இழைத்தன என ஐ.நா. அறிக்கை தெரிவித்துள்ளது.

சிரியாவில் ரஸ்யா யுத்தகுற்றங்களை இழைத்துள்ளது என ஐ.நா. குற்றம்சாட்டுவது இது முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...