Main Menu

சாதனைப் பெண் ஜெயலலிதாவின் நினைவு தினம்

இந்தியாவில் நீண்டகாலம் பதவி வகித்த 2வது பெண் முதல்வர், 29 ஆண்டுகள் கட்சியின் பொதுச்செயலாளர், தமிழகத்தின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவர், ஏழு மொழிகளில் சரளமாக பேசத் தெரிந்தவர், சிறந்த நடிகை என பல சிறப்புகளுக்கு சொந்தக்காரியான ஜெயலலிதாவின் 3ஆவது நினைவு தினம் இன்றாகும்.

கர்நாடாகாவின் மைசூருவில் 1948ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 24ஆம் திகதி பிறந்த ஜெயலலிதா, நான்கு வயதிலிருந்தே பரத நாட்டியம், கர்நாடக இசை பயிற்சி பெற்றவர். சென்னையில் பள்ளி படிப்பை முடித்த அவர், குடும்ப சூழல் காரணமாக சினிமாவில் கால் பதித்தார்.

17 ஆண்டுகள் சினிமாவில் வலம்வந்த இவருக்கு 1972ல் சிவாஜியுடன் நடித்த ‘பட்டிக்காடா பட்டணமா’ என்ற திரைப்படம் தேசிய விருதை பெற்றுகொடுத்தது. எம்.ஜி.ஆருடனான அவரது ஜோடி அந்தக்காலத்தில் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

சினிமாவில் தடம்பதித்த ஜெயலலிதா எம்.ஜி.ஆர். இன் வழிகாட்டுதலில் அரசியலில் 1982ல் அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினராக கால் பதித்தார். 1983ல் கொள்கை பரப்புச் செயலரானார். 1984ல் ராஜ்யசபா எம்.பி. ஆனார்.

1984 டிசம்பரில் அமெரிக்காவில் எம்.ஜி.ஆர். சிகிச்சை பெற்று வந்தார். அப்போது நடந்த லோக்சபா சட்டசபை தேர்தல்களில் அ.தி.மு.க. – கூட்டணி வெற்றி பெற்றது. இதில் ஜெயலலிதாவின் பங்கு முக்கியமானது. எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்னர் 1987ல் ஜெயலலிதா – ஜானகி அணிகள் என அ.தி.மு.க. இரண்டாக பிரிந்தது. ‘இரட்டை இலை’ சின்னம் முடக்கப்பட்டது.

1989 சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. ‘சேவல்’ சின்னத்தில் போட்டியிட்டு 27 இடங்களில் வென்று, எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது. போடி தொகுதியில் வென்ற ஜெயலலிதா தமிழகத்தின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவரானார். 1989 பெப்ரவரியில் அ.தி.மு.க.வை ஜெயலலிதா ஒன்றிணைத்தார்.

அ.தி.மு.க. கூட்டணி 1991 சட்டசபை தேர்தலில் 225 தொகுதிகளில் வென்றது. ஜெயலலிதா முதன்முறையாக முதல்வரானார். அதன்பின்னர் 2001ல் முதல்வரனார். 2016 தேர்தலில் 136 தொகுதிகளில் வென்று எம்.ஜி.ஆருக்குப்பின்னர் தொடர்ந்து 2வது முறையாக முதல்வராகி சாதித்தார். 2016 செப்டம்பர் 22ல் உடல்நலம் பாதிக்கப்படு, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 75 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் டிசம்பர் 5ஆம் திகதி காலமானார்.

தேசிய விருது, பிலிம் பேர் விருது, கலைமாமணி விருது, தங்க தாரகை விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்று சினிமாவில் சாதனைப் படைத்த ஜெயலலிதா, இந்தியாவின் நீண்டகாலம் பதவி வகித்த 2வது பெண் முதல்வர், 29 ஆண்டுகள் கட்சியின் பொதுச்செயலாளர், தமிழகத்தின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவர், ஏழு மொழிகளில் சரளமாக பேசத் தெரிந்தவர், தைரியமான பெண்மணி என அரசியலிலும் கொடிகட்டிப் பறந்தவர்.

இவரின் இழப்பு தமிழக மக்களுக்கு மாத்திரமன்றி இந்திய அரசியலுக்கும் பெரும் இழப்பாகவே அமைந்திருந்தது என்பது மறுக்கப்படாத உண்மை என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...