Main Menu

சாட் நாட்டில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து : 30 பேர் பலி?

சாட் நாட்டில் சட்டவிரோதமாக செயல்பட்டுவந்த தங்கச்சுரங்கம் இடிந்து விழுந்த விபத்தில் 30-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

வடக்கு-மத்திய ஆப்பிரிக்காவில் சாட் குடியரசு என்ற நாடு உள்ளது. இந்நாட்டை சுற்றி லிபியா, சூடான் மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகள் எல்லைகளாக அமைந்துள்ளது.
அந்நாட்டின் லிபிய எல்லை பகுதியான கொவ்ரி ஃபவ்டி நகரில் உள்ள சுரங்கங்களில் தங்கம் இருப்பது கடந்த 2012-ம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியை சேர்ந்த சிலர் சட்டவிரோதமாக சுரங்கம் அமைத்து தங்கத்தை எடுத்து வெளிச்சந்தைகளில் விற்பனை செய்கின்றனர்.
இந்நிலையில், கொவ்ரி ஃபவ்டி பகுதிகளில் 30-க்கும் அதிகமானோர் நேற்று முன்தினம் (செவ்வாய்கிழமை) சட்டவிரோதமாக சுரங்கம் அமைத்து தங்கத்தை எடுக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக சுரங்கத்தின் மேல் பரப்பில் இருந்த மண் திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் சுரங்கத்தில் வேலை செய்து கொண்டிருந்த அனைவரும் சிக்கிக்கொண்டனர்.

தகவலறிந்த மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர். தங்கச் சுரங்கம் மண் சரிவால் முற்றிலும்  மூடப்பட்டிருப்பதால் அதில் சிக்கியுள்ள அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

பகிரவும்...