Main Menu

சவூதி அரேபியாவில் ஒரே நேரத்தில் 81 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

சவூதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட 81 பேரில் 73 பேர் சவூதி நாட்டை சேர்ந்தவர்கள், 7 பேர் ஏமன் நாட்டைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஒருவர் சிரியா நாட்டவர் என்றும் கூறப்பட்டுள்ளது.

சவூதி அரேபியாவில் குற்றச்செயல்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டு வருகின்றது. கொலை, தீவிரவாத செயல், பாலியல் பலாத்காரம் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு வருகிறது.

ஐரோப்பிய நாடுகளில் மரண தண்டனைக்கு எதிராகப் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். மரண தண்டனைக்கு எதிராக மனித உரிமை ஆர்வலர்கள் குரல் கொடுத்து வரும் போதிலும், பயங்கரவாதம் உள்ளிட்ட மோசமான குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை சரி என்றே மற்றொரு தரப்பினர் கூறி வருகின்றனர்.

இந்தச் சூழலில் சவூதி அரேபியாவில் ஒரே நாளில் 81 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இது கடந்த ஆண்டு முழுவதும் அங்கு நிறைவேற்றப்பட்ட மொத்த மரண தண்டனைகளை விட அதிகமாகும்.

தண்டனை நிறைவேற்றப்பட்ட அனைவரும் பல கொடூரமான குற்றங்களைச் செய்தவர்கள். அவர்களில் பலர் பயங்கரவாத இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ்., அல்கொய்தா, யேமனின் ஹுதி கிளர்ச்சிப் படைகள் தொடர்புடைய மற்றும் அவர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்ட குற்றவாளிகள் என்று சவூதி அரசு தெரிவித்து உள்ளது.

சவூதியின் முக்கியமான பொருளாதார மையங்கள் மீது தாக்குதல்களைத் திட்டமிட்டவர்கள். சிலர் சவூதி பாதுகாப்புப் படைகள் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டவர்கள். சிலர் சட்ட விரோதமான ஆயுதங்களை நாட்டிற்குள் கடத்தினார்கள். இதுபோன்ற மோசமான குற்றங்களைச் செய்தவர்களுக்கு மட்டுமே மரண தண்டனை அளிக்கப்படுகிறது என்று சவூதி அரசின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனத்தில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட 81 பேரில் 73 பேர் சவூதி நாட்டை சேர்ந்தவர்கள், 7 பேர் ஏமன் நாட்டைச் சேர்ந்தவர்கள். மற்றும் ஒருவர் சிரியா நாட்டவர் என்றும் கூறப்பட்டுள்ளது. தூக்கிலிடப்பட்ட அனைவரும் சவூதி நீதிமன்றங்களில் முறையாக விசாரிக்கப்பட்டனர் என்றும் ஒவ்வொரு நபரின் வழக்குகளும் 3 தனித்தனி நிலைகளில் 13 நீதிபதிகளால் விசாரிக்கப்பட்டது என்றும் சவூதி அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் அதிகம் மரண தண்டனை விதிக்கும் நாடுகளில் ஒன்றாக சவூதி இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. 1979-ம் ஆண்டு மக்காவில் உள்ள பெரிய மசூதியைக் கைப்பற்றியதாக குற்றம்சாட்டப்பட்ட 63 பேருக்கு ஜனவரி 1980-ம் ஆண்டு ஜனவரி மாதம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. 2016-ம் ஆண்டு ஒரே நாளில் ஷியா முஸ்லிம் மதகுரு நிம்ர் அல்நிம்ர் உள்பட மொத்தம் 47 பேர் தூக்கிலிடப்பட்டனர். 1979-ம் ஆண்டுக்கு பிறகு இப்போதுதான் ஒரே நேரத்தில் அதிக அளவிலான மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு உள்ளது.

மரண தண்டனை நிறைவேற்றம் குறித்து சவூதி அரேபியா அரசு தொலைக்காட்சி செய்தியில் தண்டனை அடைந்தவர்கள் சாத்தானின் அடிச்சுவட்டை பின்பற்றியவர்கள் என்று குறிப்பிடப்பட்டது.

ரஷியா-உக்ரைன் போரில் பெட்ரோல், டீசல் விலைகள் கணிசமாக உயர்ந்து விட்டன. இந்த சூழலில் கச்சா எண்ணெய் விலை தொடர்பாக ஆலோசிக்க இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சன் அடுத்தவாரம் சவூதி அரேபியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளார். இந்த சூழ்நிலையில் சவூதி அரேபியாவில் ஒரே நேரத்தில் 81 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது உலக நாடுகளை உற்றுநோக்க செய்துள்ளது.

பகிரவும்...