Main Menu

சீனாவை எதிர்க்க பிரதமர் மோடிக்குத் துணிச்சல் இல்லை- ராகுல் காந்தி

சீனாவை எதிர்க்க பிரதமர் மோடிக்கு துணிச்சல் இல்லையென காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தில், இரண்டாவது கட்டமாக தமிழகத்தில் இன்று (சனிக்கிழமை) தேர்தல் பிரசாரத்தை ராகுல்காந்தி தொடங்கியுள்ளார்.

இந்நிலையில், தூத்துக்குடியில் வழக்கறிஞர்களுடன் கலந்துரையாடிய ராகுல் காந்தியிடம், மூத்த வழக்கறிஞர் ஒருவர், சீன ஊடுருவலில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்துக் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த ராகுல் காந்தி, “இந்தியாவின் சில முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் சீனா ஊடுருவியுள்ளது. முதலில் அவர்கள் டோக்லாம் பகுதியில் நுழைந்து பரீட்சித்துப் பார்த்தனர். அப்போது, இந்தியா எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.

இதனால், லடாக், அருணாச்சலப் பிரதேசத்தில் ஊடுருவினார்கள். அப்போதும் பிரதமர் மோடி, இந்திய எல்லைக்குள் ஊடுருவவில்லை என்றே கூறினார். ஆனால், அவர்கள் நூறு கிலோமீற்றருக்கு மேல் ஊடுருவியுள்ளனர்.

பிரதமரின் இந்தப் பேச்சு சீனாவுக்கு ஊக்கத்தைக் கொடுத்துள்ளதுடன் இந்தியப் பிரதமர் தைரியமற்றவர் என்ற எண்ணத்தையும் அவர்களுக்குக் கொடுத்துள்ளது.

அதன்பிறகு, அதே மனநிலையுடன் பேச்சுவார்த்தையை ஆரம்பித்துள்ளார்கள். அவர்களை எதிர்ப்பதற்கு இந்தியப் பிரதமர் துணியவில்லை என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரிந்துள்ளது. பா.ஜ.க. ஆட்சி இருக்கும் வரை சீனாவிடம் இழந்த நிலத்தை இந்தியா மீண்டும் பெறமுடியாது. இது மிகவும் ஆபத்தான போக்கு.

காங்கிரஸ் ஆட்சியில் சீனாவை எவ்வித தயக்கமும் இன்றி காங்கிரஸ் அரசு துணிச்சலுடன் எதிர்த்தது. கடந்த 2013ஆம் ஆண்டு அவர்கள் ஊடுருவிய போது நமது படை அவர்களை எதிர்த்துப் பின்வாங்கச் செய்தது. நாம் அவர்களுடைய நிலத்திற்குள் ஊடுருவவும் செய்தோம். ஆனால், இன்றைய பிரதமருக்கு அந்தத் தைரியம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...