Main Menu

சலுகையா உரிமையா என்ற போராட்டத்தில் நாம் சலுகைக்கு இடமளித்து விட்டோம் – சி.வீ.விக்னேஸ்வரன்

சலுகையா உரிமையா என்ற போராட்டத்தில் இப்பொழுது நாம் சலுகைக்கு இடமளித்து விட்டோம். எங்கோ இருந்தவர்கள் வந்து  இரவிரவாக மக்களுக்கு சலுகைகளைக் கொடுத்து இன்று மக்களால் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள் என  நீதியரசர் சி.வீ.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழில் நேற்று மாலை நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் ” எமது உரிமைக்காக போராடிய இளைஞர்கள் மடிந்த காலம் போய் வெறும் களியாட்ட நிகழ்வுகளிலே எமது இளைஞர்களுடைய மனம் லயிக்கக் கூடியதான சூழலை ஏற்படுத்துகின்றார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்தவர்கள் அரசாங்கத்தின் கையாற்களாக மாறினார்கள். அது எதற்காக என்றால் வட கிழக்கு மாகாண தமிழ் மக்களினுடைய மனதை மெல்ல மெல்லமாக மாற்றி உரிமைகளை விட்டு சலுகைகளை நோக்கி செல்ல வைப்பதற்கான சதித்திட்டத்தின் விளைவுதான் இந்த தேர்தலில் ஒரு தீர்மானம் மக்களால் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

இப்பொழுது இருக்கும் இளைஞர்களுக்கு போரினுடைய வலிகள், துன்பங்கள் தெரியாது. ஏனென்றால் போர் நடைபெற்ற காலத்தில் அவர்கள் சிறுவர்களாக இருந்திருப்பார்கள் இப்பொழுதுதான் வாக்களிக்கும் உரிமையைப் பெற்று இளைஞர்களாக உள்ளனர்.  அவர்களுக்கு என்ன தேவை களியாட்ட நிகழ்வுகளும் போதைப் பொருள் பாவனை போன்ற தற்காலிக சந்தோகங்களில் இருக்கின்றார்களே தவிர வருங்காலத்திலே தமிழ் மக்களுக்கு என்ன நடைபெறப் போகின்றது, தமிழனின் கலாசாரம், பண்பாடு, மொழி இவை அனைத்தையும் அழிக்க துடிக்கின்றார்கள் போன்றவை பற்றிய எந்த சிந்தனையும் கிடையாது.

இவ்வாறான ஒரு நிலையிலேயே மக்கள் தீர்மானம் தரப்பட்டிருக்கின்றது. ஆகவே, எமது இளைஞர்கள் இதிலிருந்து விடுபட வேண்டுமாக இருந்தால் பல விதமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இளைஞர்களுடைய குறிக்கோள்களை மாற்ற வேண்டும். சமூக புரட்சி ஒன்றை ஏற்படுத்த தவறுவோமாக இருந்தால் நாங்கள் அழிந்தவராகிவிடுவோம்.

வெகுவிரைவிலே இந்த நாட்டிலே சர்வதிகாரம் திளைக்கப் போகின்றது. அதற்குரிய சகல விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. அதற்குரிய அத்திவாரம் இடப்பட்டு விட்டது. ஆனாலும் எமது உரிமைகளை நாம் கேட்டே தீருவோம். ஆனால் சிலர் நினைக்கின்றார்கள் அதிகார பலம் அவர்களிடம் சென்றதன் பின்னர் கிடைப்பதைப் பெற்றுக் கொண்டு நாங்கள் வாயை மூடிக் கொண்டு இருந்தால் என்ன என்ற நினைக்கின்றார்கள்.

சலுகையா உரிமையா என்ற போராட்டத்தில் இப்பொழுது நாம் சலுகைக்கு இடமளித்து விட்டோம். எங்கோ இருந்தவர்கள் வந்து  இரவிரவாக மக்களுக்கு சலுகைகளைக் கொடுத்து இன்று மக்களால் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள். ஆகவே, கட்சியின் வெற்றிக்காக உழைத்த அனைவரும் இனிவரும் காலங்களில் மக்களின் எழுச்சிக்காக, புரட்சிக்காக பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகின்றேன்.” என்றார்.

பகிரவும்...