Main Menu

சலுகைகளுக்கு அடிபணியாத நேர்மையான தமிழ் மக்கள் பிரதிநிதிகள் உருவாக வேண்டும் – விக்னேஸ்வரன்

சலுகைகளுக்கு அடிபணியாத நேர்மையான தமிழ் மக்கள் பிரதிநிதிகள் உருவாக வேண்டும் என வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மின்னஞ்சல் மூலம் ஊடகங்களுக்கு வழங்கும் வாராந்த கேள்வி பதிலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கை 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்த பின்னர் வடக்கு கிழக்கில் அபிவிருத்தி என்ற போர்வையில் துரிதமாக மேற்கொள்ளப்பட்ட குடியேற்றத் திட்டங்களின் பின்னணியில் மூன்று பிரதான காரணங்கள் இருந்திருக்கின்றன.

தமிழ் பேசும் மக்கள் வாழ்ந்த வடகிழக்கின் நில அபகரிப்பு, வடக்கு, கிழக்கில் குடிசன பரம்பலில் மாற்றத்தை ஏற்படுத்துதல், தமிழ் மக்களின் தாயக கோட்பாட்டை சிதைக்கும் வகையில் வடக்கும் கிழக்கும் இணைந்த தமிழ் மக்களின் தொடர்ச்சியான நிலப்பரப்பை குறுக்கே சிங்கள மக்களை நுழைத்து குடியேறச் செய்து துண்டாடுதல் என்பனவே அவையாகும்.

அதேபோன்றே, தற்போதும் மகாவலி திட்டத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்டுவரும் குடியேற்ற நடவடிக்கைகள் வடக்கில் தமிழ் மக்களின் குடிசன பரம்பலில் செயற்கையான மாற்றத்தை ஏற்படுத்தப் போகின்றதாக விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 5 வருடங்களில் ஆயிரக்கணக்கான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த சில வருடங்களில் மகாவலி திட்டம் மூலம் வவுனியா, முல்லைத்தீவு மற்றும் ஏனைய பகுதிகளில் அபிவிருத்தி என்ற போர்வையில் நில அபகரிப்பும், குடியேற்றத் திட்டங்களும் இடம்பெற்றுள்ளன.

அதேவேளை, வன இலாகா திணைக்களம் மற்றும் தொல்லியல் திணைக்களம் போன்றவை திட்டமிட்ட குடியேற்றங்களுக்கும் நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு துணைபோகும் வகையில் செயற்பட்டு வந்துள்ளதாகவும் விக்னேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட செயலக 2019 ஆம் ஆண்டு புள்ளிவிபரங்களின்படி, முல்லைத்தீவு மாவட்டத்தில் 679 ஏக்கர் தனியார் காணிகளும், 3178 ஏக்கர் அரச காணிகளும் பாதுகாப்புத் தரப்பினர் வசம் உள்ளன.

மன்னார் மாவட்டத்தில் 12,154 ஏக்கர் காணியை வன விலங்குகள் திணைக்களமும், 12,275 ஏக்கர் காணிகளை வன இலாகாவும் தம்வசப்படுத்தியுள்ளன.

மாகாவலி திட்டத்தின் ஊடாக, இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த நிலையில், அது குறித்து மாற்று நடவடிக்கைகளில் ஈடபட வேண்டும்.

சிங்களத் தலைவர்களும், முஸ்லீம் தலைவர்களும் ஒற்றுமையாகச் சிந்தித்துத் தமது மக்களின் நலனைப் பேண நடவடிக்கைகள் எடுத்து வந்துள்ளனர்.

அவர்கள் தமது புத்திஜீவிகளின் முடிவுகளை ஆராய்ந்து தேவையானவற்றை நடைமுறைப்படுத்தி தமது இன நலன்களை மேம்படுத்தி வந்துள்ளனர்.

ஆனால் தங்கள் தரப்பின் கட்சி நலன் குறித்தும், தங்களின் சொந்த நலன்கள் குறித்தும் சிந்திக்கும் அளவுக்கு மக்கள் நலனில் கவலை கொள்வதாகத் தெரியவில்லை என விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

இந்த நிலையில், இனியாவது தமிழ் மக்களின் பிரதிநிதிகள் மிகவும் நேர்மையாகவும், விஸ்வாசமாகவும், தமிழ்ப் பற்றுடனும், இனப் பற்றுடனும் செயற்பட முன்வர வேண்டும்.

சலுகைகளுக்கு அடிபணியாத நேர்மையான தமிழ் மக்கள் பிரதிநிதிகள் உருவாக வேண்டும்.

அனைவரும் ஒன்று சேர்ந்து மகாவலித் திட்டம் தங்களுக்கு வேண்டாம் என்று கூறும் காலம் வெகு தொலைவில் இல்லை என வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...