Main Menu

சர்வதேச விசாரணை கோரிய போராட்டம்: மட்டக்களப்பில் மூன்றாவது நாளாகத் தொடர்கிறது

இலங்கையில் தமிழ் மக்களுக்கு முன்னெடுக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேச ரீதியில் நீதிவேண்டி வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படும் சுழற்சி முறையிலான உணர்வு தவிர்ப்பு போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் நடைபெறுகிறது.

இதன்படி, அன்னை பூபதி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றிலில் கடந்த புதன்கிழமை ஆரம்பமான போராட்டம் தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்படுகிறது.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் எஸ்.சிவயோகநாதன் தலைமையில் நடைபெற்றுவரும் இந்தப் போராட்டத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் உட்பட பெருமளவானோர் ஆதரவு வழங்கிவருகின்றனர்.

சர்வதேச சமூகத்திடம் நான்கு கோரிக்கைகளை முன்வைத்து நடத்தப்படும் இந்தப் போராட்டம் ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் கூட்டத்தொடர் நிறைவுபெறும் வரையில் முன்னெடுக்கப்படவுள்ளது.

இன்றைய தினம் உள்ளுராட்சி மன்றப் பிரதிநிதிகள், பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள், மகளிர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு ஆதரவு வழங்கி வருகின்றமை குறிப்பிடத்கக்கது.

பகிரவும்...