Main Menu

சர்வதேச நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தால் கூட என்னை தோற்கடிக்க முடியாது-ரணில்

ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்து சென்ற தரப்பினர், தனக்கெதிராக சர்வதேச நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தால்கூட, தன்னை தோற்கடிக்க முடியாது என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பதுளையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியுள்ளதாவது, “இலங்கையில் இதுவரை நடைபெற்ற அனைத்து நாடாளுமன்றத் தேர்தல்களிலும், நாம் எமது வேலைத்திட்டங்களை மக்களிடம் முன்வைத்தே களமிறங்கியுள்ளோம்.

அதற்கான ஆணை கிடைத்தால், நாம் ஆளும் தரப்பாகவும் ஆணை கிடைக்காவிட்டால் எதிர்க்கட்சியாகவும் செயற்பட்டு வந்துள்ளோம். இதுதான் எமது பிரதான நோக்கமாகும். நாட்டை பாதுகாப்பது ஒன்றுதான் எமது கட்சியின் பிரதான செயற்பாடாகும்.

ஐக்கிய தேசியக் கட்சி என இரண்டு கட்சிகள் கிடையாது. சிலர் கட்சியிலிருந்து வெளியேறி, தற்போது ஐக்கிய தேசியக் கட்சியினர்தான் தாங்கள் எனக் கூறிக்கொண்டிருக்கிறார்கள்.

அத்தோடு, சிலர் எனக்கெதிராக வழக்கு தாக்கல் செய்தார்கள். நாம் எதற்கும் அஞ்சப்போவதில்லை. எந்த நீதிமன்றதிலேனும் வழக்கு தொடருங்கள்.

உள்ளூர் நீதிமன்றங்கள் போதாவிட்டால், சர்வதேச நீதிமன்றங்களில் வழங்குத் தொடருங்கள். எங்கு சென்றாலும் என்னை தோற்கடிக்க முடியாது.

இந்தத் தரப்பினருக்கு பொதுத்தேர்தல் முடிந்தவுடன், சிறிகொத்தவை பிடிப்பதுதான் பிரதான நோக்கமாகும். ஆனால், எமக்கு இன்னொரு அரசியல் கட்சியின் காரியாலயத்தை கைப்பற்றுவது நோக்கம் கிடையாது. மாறாக அரசாங்கத்தை கைப்பற்றுவதுதான் எமது இலக்கு” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...