Main Menu

சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பினால் 5 ஆண்டு சிறை: சவுதி அரேபியாவில் அதிரடி

சமூக ஊடகங்களில் ஆதாரமற்ற வதந்திகளை பரப்பினால் 5 ஆண்டு சிறைத்தண்டனையும், பெரும் அபராதமும் விதிக்கப்படும் என்ற அறிவிப்பு சவுதி அரேபியாவில் வெளியாகி உள்ளது.

சமூக ஊடகங்களில் ஆதாரமற்ற வதந்திகளை பரப்புவது என்பது பல்வேறு நாடுகளில் அரங்கேறி வருகிறது. இது சமூகத்தில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது.

இதே போன்றதொரு நிகழ்வு, சவுதி அரேபியாவில் பொங்கல் பண்டிகை நாளில் (14-ந் தேதி) நடந்தது.

அன்று அங்கு தலைநகர் ரியாத்தின் புறநகரில் கே-பாப் இசைக்குழுவின் கச்சேரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இது பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருந்தது.

ஆனால் அன்றைய தினம் அங்கு பெரும் காற்று வீசியதை அடுத்து அந்த இசை நிகழ்ச்சி கடைசி நிமிடத்தில் ரத்தானது.

இதனால் புறநகர் பகுதி மைதானத்தில் இருந்து வீடு திரும்ப முடியாமல் ரசிகர்கள் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டது.

அப்போது சமூக ஊடகங்களில் சிறுமிகள் காணாமல் போய்விட்டதாகவும், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி பீதியை ஏற்படுத்தின.

இதையொட்டிய ஹேஷ்டேக்குகள் அதிகரித்து, ஆபத்தின் உணர்வை பன்மடங்காக பெருக்கியது. இதில் உண்மை இன்னும் தெளிவாக தெரியவரவில்லை.

அங்கு இருந்ததாக கூறுகிற பலரும், இது போன்ற சம்பவங்கள் நடக்கவில்லை என்றும், இக்கட்டான நிலையிலும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சிறப்பாக செயல்பட்டதாகவும் கூறி உள்ளனர்.

ஆனாலும், பெண்களைத் துன்புறுத்துவதாக கூறப்படும் ஆண்களின் படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகின. அந்த ஆண் படங்களில் சில சமூக ஊடகங்களில் இருந்து எடுக்கப்பட்டவை என்ற நிலையில், பெண்கள் துன்புறுத்தலுக்கு ஆளானதாக வெளியான தகவல்களுக்கு அது மேலும் பலம் சேர்ப்பதாக அமைந்தது.

ஆனாலும் சவுதி அரேபிய பொழுதுபோக்கு ஆணையத்தின் தலைவர் துர்கி அல் ஷேக், பெண்கள் துன்புறுத்தல் பற்றிய அறிக்கைகள் முற்றிலும் தவறானவை என்று பல டுவிட்டர் பதிவுகளை தொடர்ந்து வெளியிட்டார்.

சமூக ஊடகங்களில் தகவல் வெளியிட்டவர்கள் அல்லது ஆன்லைனில் விவாதங்கள் வெளியிட்டவர்களில் சிலர் அச்சுறுத்தல் காரணமாக தங்கள் கணக்குகளை மூடிவிட்டதாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் சவுதி அரேபியாவில் சமூக ஊடகங்களில் தவறான தகவல்களை ஆதாரம் இன்றி வெளியிடுவதை முடிவுக்கு கொண்டு வர அரசு அதிரடி நடவடிக்கையில் இறங்கியது.

அங்கு இனி யாரேனும் ஆதாரம் இன்றி சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பினால் அவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், பெரும் தொகை அபராதமும் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பகிரவும்...