Main Menu

சட்டமன்றத் தேர்தல் ஒத்திவைப்பை எதிர்த்து ஹொங்கொங்கில் போராட்டம்- 300 பேர் கைது!

ஜனநாயக சார்பு ஆர்ப்பாட்டக்காரர்கள், உள்ளூர் சட்டமன்றத் தேர்தலை ஒத்திவைப்பதை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் 300பேர் வரை கைதுசெய்யப்பட்டுள்ளனர் என நகர காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இவர்களில் பெரும்பான்மையானவர்கள் சட்டசபைச் சட்டங்களை மீறியதாக கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்தப் போராட்டம் ஆசிய நிதி மையத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுக்கப்பட்ட நிலையில், போராட்டக்காரர்கள் சீனா கொண்டுவந்த புதிய தேசிய பாதுகாப்புச் சட்டத்துக்கும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

ஹொங்கொங்கில் கடந்த ஜூலை 31ஆம் திகதி நடைபெறவிருந்த சட்டமன்றத் தேர்தலை, நகரின் தலைமை நிர்வாகி கேரி-லாம் ஒரு வருடத்திற்கு ஒத்திவைத்தார்.

இந்தத் தேர்தல் திட்டமிட்டபடி நடந்திருந்தால் எதிர்க்கட்சி பெருவாரியான இடங்களைக் கைப்பற்றி ஆட்சிபீடம் ஏறும் என்ற அச்சநிலை காரணமாக தற்போதைய கேரி-லாம் அரசாங்கம் தேர்தலை ஒத்திவைத்ததாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இதேவேளை, ஜூன் மாத இறுதியில் சீனா புதிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை ஹொங்கொங்கில் அமுல்படுத்தியுள்ளமைக்கு அங்குள்ள மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டும் போராட்டங்களை நடத்தியும் வருகின்றனர். இந்நிலையில் போராட்டக்காரர்கள் மற்றும் ஜனநாயக ஆதரவாளர்கள் புதிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைதாகும் நிலைமையும் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் முதல் கிட்டத்தட்ட ஒவ்வொரு வார இறுதியில் ஹொங்கொங்கில் அரசாங்கம் மற்றும் சீன ஆதிக்கத்தை எதிர்த்து போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...