Main Menu

மாநில தரப் பட்டியலில் தமிழகம் கடும் பின்னடைவு: தம்பட்டம் அடிப்பதை நிறுத்துங்கள்!- அழகிரி

இந்தியாவிலேயே தமிழகம் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது என்று தம்பட்டம் அடிப்பதை இனியாவது தமிழக ஆட்சியாளர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

அத்துடன், அனைத்துத் துறைகளிலும் தமிழகம் வளர்ச்சி குன்றி, தாழ்ந்த நிலைக்குச் சென்றுகொண்டிருப்பதை மத்திய அரசின் தரவரிசைப் பட்டியலே அம்பலப்படுத்தி இருப்பதை முதல்வர் பழனிசாமி உணரவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “ ‘மாநில தொழில் சீர்த்திருத்த செயற்றிட்டம்-2019’ அடிப்படையில் எளிதாகத் தொழில் நடத்துவதற்கான சூழலை மேம்படுத்தும் மாநிலங்களின் தரவரிசைப் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது.

கட்டுமான அனுமதி, தொழிலாளர்கள் கட்டுப்பாடு, சுற்றுச்சூழல் பதிவு, தகவல்களை அணுகுதல், நிலம் கிடைக்கும் தன்மை, ஒற்றைச் சாளர அனுமதி எனப் பல அம்சங்களின் அடிப்படையில் ஆராயப்பட்டு இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் எளிதாக தொழில் நடத்துவதற்கு உகந்த மாநிலங்களின் பட்டியலில் ஆந்திரா முதல் இடம் வகிக்கிறது. தமிழகம் பதினான்காவது இடத்தில் உள்ளது.

அந்தவகையில் முதல் பத்து மாநிலங்களில் கூட இடம்பெற முடியாமல் தமிழகம் பதினான்காவது இடத்திற்குத் தள்ளப்பட்டிருப்பது பல்வேறு நிலைகளில் முதலீடுகளைப் பாதிப்பதற்கான சூழல் ஏற்பட்டிருக்கிறது.

இந்தப் பட்டியலைப் பார்க்கிறபோது முதலீடு செய்பவர்கள் ஆந்திர மாநிலத்திற்குச் செல்வார்களேயொழிய தமிழகத்திற்கு வரமாட்டார்கள்.

கொரோனா தொற்றினால் தமிழகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, தொழிற்சாலைகள் நலிவடைந்து, வேலை வாய்ப்புகள் இழந்து, பொருளாதார ரீதியாகப் பேரழிவைச் சந்தித்துக் கொண்டிருக்கிற நிலையில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் அடிப்படையில் வெளிப்படுகிற அறிவிப்புகள் எவையுமே நம்பக்கூடியதாக இல்லை. இவை வெறும் கண்துடைப்பு அறிவிப்புகளாகவே கருத்தப்பட வேண்டியிருக்கிறது.

நம்மால் காணமுடியாத ஒன்றை நமது முதல்வர் கற்பனையாக அறிவித்துக் கொண்டிருக்கிறார். யதார்த்த நிலைக்கும் முதல்வர் அறிவிப்புக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

இந்நிலையில், மத்திய அரசு வெளியிட்ட தரவரிசைப் பட்டியலில் எளிதாக தொழில் நடத்த உகந்த மாநிலமாக தமிழகம் இல்லாமல் போனதற்கு என்ன காரணம் என்பதை தமிழக முதல்வர் ஆய்வு செய்யவேண்டும்.

இந்தியாவிலேயே தமிழகம் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது என்று தம்பட்டம் அடிப்பதை இனியாவது தமிழக ஆட்சியாளர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும். அனைத்துத் துறைகளிலும் தமிழகம் வளர்ச்சி குன்றி, தாழ்ந்த நிலைக்கு சென்றுகொண்டிருப்பதை மத்திய அரசின் தரவரிசைப் பட்டியலே அம்பலப்படுத்தியிருப்பதை தமிழக முதல்வர் உணரவேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பகிரவும்...