Main Menu

கோயில் மீது காலிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல்: கனடாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம்

இந்து கோயில் மீது காலிஸ்தான் பிரிவினைவாத  குழுவினர் திடீர் தாக்குதல் நடத்திய நிலையில், கனடாவுக்கு இந்தியா கடும் கண்டனத்தையும் அதிருப்தியையும் தெரிவித்துள்ளது.

கனடாவின் டொரண்டோ மாகாணத்துக்கு உட்பட்ட பிராம்ப்டன் பகுதியில் உள்ள இந்து சபா கோயில் மீது பிரிவினைவாத  குழுவினர் நேற்று தாக்குதல் நடத்தினர். கோயிலில் இருந்த குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் மீதும்  தாக்குதல் நடத்தியுள்ளனர். கனடாவில் தூதரக முகாமுக்கு இந்திய அதிகாரிகளின் வருகையைக் கண்டித்து இந்தப் போராட்டத்தில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஈடுபட்டதாகத் தெரியவந்தது.

இந்தத் தாக்குதலின்போது அப்பகுதி வன்முறைக் களமாக மாறியது. அங்கிருந்த இந்து மக்களை விரட்டியடித்தனர். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் பரவியது. இந்நிலையில்இந்த சம்பவத்துக்கு கனடாபிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

இதுதொடர்பாக கனடா பிரதமர் ட்ரூடோ சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்ப தாவது: பிராம்ப்டனில் உள்ள இந்து கோயிலில் நடந்த வன்முறைச் செயல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. ஒவ்வொரு கனடியர்களும் தங்கள் நம்பிக்கையைச் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் கடைப்பிடிக்க உரிமை உண்டு. இந்த சம்பவம் குறித்து போலீஸார் விரிவான விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் நேற்று கூறியதாவது: கனடாவில் இந்து கோயில் மீதும், இந்துக்கள் மீதும் திட்டமிட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தசம்பவத்துக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேநேரத்தில், கனடாவில் நடக்கும் செயல்களுக்கு இந்தியத்தூதரக அதிகாரிகளை மிரட்டும் போக்கில் நடந்து கொள்ளும் கோழைத்தனமான கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நிர்வாகத்தையும் நான் கண்டிக்கிறேன்.

இத்தகைய வன்முறைச் செயல்கள் இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது. இந்த விவகாரத்தில் கனடா நாட்டுஅரசு, நீதியை உறுதிப்படுத்தி சட்டத்தின் கடமையை நிலைநாட்டும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப் பட்ட விவகாரத்தைத் தொடர்ந்து கனடாவுக்கான இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா உள்ளிட்ட 6 இந்திய தூதரக அதிகாரிகளை கனடா அரசு வெளியேற்றியது. இதற்கு பதிலடியாக இந்தியாவில் பணியாற்றிய 6 கனடா தூதரக அதிகாரிகளை மத்திய அரசு வெளியேற்றியது. இந்தியா, கனடா நாடுகளின் உறவுகள் மோசமாகி வரும் நிலையில் முதல்முறையாக கனடாவுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்நிலையில், கனடாவில் இந்துக்கள் மீதும் இந்து கோயில்கள் மீதும் தாக்குதல்நடத்தியதற்கு இந்தியா கடும் கண்டனத்தையும், அதிருப்தியையும் தெரிவித்துள்ளது.

கனடா தலைநகர் ஒட்டவாவில் உள்ள இந்திய தூதரகத்தின் உயர்அதிகாரிகள் இது குறித்து தெரிவித்ததாவது: டொரண்டோவிலுள்ள தூதரகமுகாமுக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்ட காலிஸ்தான்பிரிவினைவாதிகளால் திட்டமிட்டு இந்து கோயில்கள் மீதும் இந்து பக்தர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கனடாவில் நிலவும் சூழ்நிலையின் காரணமாக, வழக்கமான தூதரகப் பணிகளுக்கும் நிகழ்வுகளுக்கும் அதிகமான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு கனடா நாட்டு அதிகாரிகளிடம் முன்கூட்டியே இந்தியா சார்பில் கோரப்பட்டது.

இருப்பினும், எங்கள் பணிக்கு இடையூறு விளைவிக்கும் இது போன்று நடந்த செயல்கள் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பு குறித்தும் மிகுந்த அக்கறையுடன் உள்ளோம். இந்து கோயில் மீது நடந்த தாக்குதல் சம்பவத்துக்கு கண்டனத்தைப் பதிவு செய்கிறோம். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக கனடா நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் பியரி போய்லீவர் கூறும்போது, “பிராம்ப்டனில் உள்ள இந்து சபா கோயிலில் நடந்த சம்பவங்கள் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாதவை. கண்டிக்கத்தக்கது. சம்பவத்துக்குக் காரணமானவர்கள் மீது கனடா அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றார்.

இந்த சம்பவத்துக்கு கனடா நாட்டு எம்.பி. சந்திர ஆர்யா, ஒன்டாரியோ சீக்கியர்கள் மற்றும் குருத்வாரா கவுன்சில் அமைப்பு (ஓஎஸ்ஜிசி), விஎச்பி அமைப்பின் சர்வதேச செயல் தலைவர் அலோக் குமார் உள்ளிட்டோர் கனடா அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பகிரவும்...
0Shares