Main Menu

கொவிட்-19 வைரஸ் வலுவிழந்து விட்டது: இத்தாலி நோய் தடுப்பு மருத்துவர்

மனித அழிவுகளை ஏற்படுத்தும் கொவிட்-19 வைரஸ் தற்போது வலுவிழந்துவிட்டது என சான் மார்டினோ மருத்துவமனையின் நோய் தடுப்பு பிரிவின் தலைமை மருத்துவர் மேட்டியோ பாஸ்செட்டி (matteo bassetti) தெரிவித்துள்ளார்.

நீண்ட நாட்களாக கொவிட்-19 குறித்த ஆய்வில் ஈடுபட்டு வரும் அவர், செய்தி ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘கொரோனா வைரஸ் வீரியம் குறைந்து வருகிறது. இதற்கு மரபணுக்கள் மாற்றம் காரணமாக இருக்கலாம். மார்ச், ஏப்ரல் மாதங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டதால் அவர்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் கடந்த மாதங்களாக இந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

தற்போது 80 வயதை கடந்தவர்கள் கொரோனா வந்தால் சிரமத்துக்கு உள்ளாகமல் இருக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம் கொரோனா வலுவிழந்துவிட்டது. விரைவில் கொரோனா தானாகவே மறையக் கூடும்’ என கூறினார்.

கடந்த ஜனவரி மாதம் 29ஆம் திகதி, இத்தாலிக்கு வந்த 2 சீன சுற்றுலா பயணிகளுக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று இருப்பது முதல் முறையாக உறுதி செய்யப்பட்டதும், பிற ஐரோப்பிய நாடுகளைவிட மிகவும் துரிதமாக நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை இத்தாலி முழு வீச்சில் முடுக்கி விட்டது. சீனாவிலிருந்து வரும் அனைத்து விமானங்களுக்கும் இத்தாலிதான் முதல் முறையாக தடை விதித்தது.

கடந்த பெப்ரவரி 22ஆம் திகதி வரை பெரும்பாலான நாடுகளைப் போல் இரண்டொரு மரணங்கள், நூற்றுக்கும் குறைவானவர்களுக்கு பாதிப்பு என்றிருந்த இத்தாலியில், அடுத்த இரண்டு மாதங்களுக்குள் அந்த நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் இத்தாலி சீனாவை முந்தியது.

ஆனால், தற்போது பெருந் தொற்று குறைந்துள்ளதால், அங்கு அமுல்படுத்தப்பட்ட முடக்கநிலை கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர்.

இத்தாலியில் இதுவரை கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கு 238,720பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 34,657பேர் உயிரிழந்துள்ளனர்.

பகிரவும்...