Main Menu

கொவிட்-19 தடுப்பு ஊசிகளை உலக நாடுகளுக்கு வினியோகிக்கும் பணியை மேற்கொள்ளும் யுனிசெஃப்!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பு ஊசியை அதிக அளவில் கொள்முதல் செய்து, உலக நாடுகளுக்கு வினியோகிக்கும் பணியை ஐ.நா. குழந்தைகளுக்கான நிதி அமைப்பு (யுனிசெஃப்) மேற்கொள்ளவுள்ளது.

உலகில் மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராகத் தடுப்பு ஊசியைத் தயாரிக்கும் பணியில் பல நாடுகளின் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில், கொவிட்-19 நோய்த்தொற்றுக்கான தடுப்பு ஊசி தயாரிக்கப்பட்ட பிறகு அதை அனைத்து நாடுகளுக்கும் கிடைக்கச் செய்வதற்கான நடவடிக்கைகளை சர்வதேச அமைப்புகள் மேற்கொண்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக தடுப்பு ஊசியைத் தயாரிக்கும் நிறுவனத்திடமிருந்து அதை அதிக அளவில் பெற்று அனைத்து நாடுகளுக்கும் வினியோகிக்கும் பணிக்கான தலைமைப் பொறுப்பை ஏற்கவுள்ளதாக யுனிசெஃப் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக யுனிசெஃப் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கொவிட்-19 நோய்த்தொற்றுக்கான தடுப்பு ஊசியைக் கொள்முதல் செய்து உலக நாடுகளுக்கு வினியோகிக்கும் பெரும் சவாலை யுனிசெஃப் ஏற்கவுள்ளது. கொவிட்-19 நோய்த்தொற்றை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான உதவியை யுனிசெஃப் செய்யவுள்ளது.

தட்டம்மை, போலியோ உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு ஆண்டுதோறும் 200 கோடி அளவில் தடுப்பு ஊசிகளைக் கொள்முதல் செய்து சுமார் 100 நாடுகளுக்கு விநியோகிக்கும் பணியை யுனிசெஃப் மேற்கொண்டு வருகிறது. அந்த அனுபவம் கொவிட்-19 தொற்றுக்கான தடுப்பு ஊசியை வினியோகிப்பதற்கும் உதவும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...